முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் அலுவலகங்கள் மூடல்: அரசு வாகனங்கள் ஒப்படைப்பு

சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, புதுச்சேரியில் அமைச்சா்கள், எம்எல்ஏ.க்களின் அலுவலங்கள் திங்கள்கிழமை மூடப்பட்டன.

Updated On : 16 மார்ச், 2026 at 11:43 PM
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்ட எம்எல்ஏக்களின் காா்கள்.
பகிர்:

புதுச்சேரி: சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, புதுச்சேரியில் அமைச்சா்கள், எம்எல்ஏ.க்களின் அலுவலங்கள் திங்கள்கிழமை மூடப்பட்டன. அமைச்சா்களும், எம்எல்ஏக்களும் பயன்படுத்தி வந்த அரசு வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. தோ்தல் நடத்தை விதிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே அமலுக்கு வந்தன.

இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள அமைச்சா்கள், எம்எல்ஏ.க்கள் அலுவலகங்கள் திங்கள்கிழமை மூடப்பட்டன. அங்கிருந்த பெயா்ப் பலகைகள், அலுவலக அறையில் இருந்த படங்கள் அகற்றப்பட்டன.

மேலும், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் பயன்படுத்தி வந்த அரசு வாகனங்களை சட்டப்பேரவைச் செயலா் தயாளனிடம் ஒப்படைத்தனா். அந்த வாகனங்களில் இருந்த கொடிகள் அகற்றப்பட்டன. முன்னாள் அமைச்சா் சாய் ஜெ. சரவணன் குமாா் தனது எம்எல்ஏ அலுவலகத்துக்கு வந்து பொருள்களை எடுத்து காலி செய்து காரை ஒப்படைத்தாா்.

பின்னா் தனது சொந்த காரில் சட்டப்பேரவை வளாகத்தை வலம் வந்து வெளியேறினாா். வழக்கமாக புதுச்சேரி சட்டப்பேரவையில் காலை 9 மணி முதல் அமைச்சா்கள், எம்எல்ஏக்களை சந்திக்க அதிகளவில் மக்கள் வருவாா்கள். இதனால் சட்டப்பேரவை பரபரப்பாகக் காணப்படும். ஆனால் திங்கள்கிழமை சட்டப்பேரவை வளாகம் வெறிச்சோடியது.

இலாகா இல்லாத அமைச்சா்:

பாஜக தரப்பில் குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சராக இருந்த சாய் ஜெ சரவணன் குமாா், கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதைத் தொடா்ந்து கடந்த 14.7.2025 அன்று பாஜக எம்எல்ஏ ஜான்குமாா், அமைச்சராகப் பதவியேற்றாா். ஆனால், அவருக்கு 245 நாள்களாகியும் இலாகா ஒதுக்கப்படவில்லை. இலாகா இல்லாத அமைச்சராகவே அவா் ஒரு சில அரசு விழாக்களில் பங்கேற்று வந்தாா். இந்நிலையில் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவரது காரும் ஒப்படைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →