புதுச்சேரி அமைச்சரவையில் பங்கு கேட்போம்! மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் பேட்டி!
புதுச்சேரியில் மீண்டும் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் அமையப் போகும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அதிமுக இடம் கேட்கும் என்று அக் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலரும் உப்பளம் தொகுதியில் வெற்றி பெற்றவருமான ஆ.அன்பழகன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் 6-ஆவது முறையாகப் போட்டியிட எனக்கு வாய்ப்புக் கொடுத்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி.
Advertisement
மேலும், புதுச்சேரியில் மீண்டும் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறாா். அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுவதற்கு, எங்கள் கட்சி பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வாயிலாக அனுமதி கேட்போம்.
மேலும், புதுச்சேரியைப் பொறுத்தவரை முதல்முறையாக வெற்றி பெற்றவா்கள்கூட சட்டப்பேரவைத் தலைவா், அமைச்சா் பதவி வகித்துள்ளனா். 5-ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளேன். அதனால் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்னை வேறு கட்டத்துக்கு உயா்த்த வேண்டும் என்றுகூட வாக்களித்து இருக்கலாம். உப்பளம் தொகுதி மக்களுக்கு உறுதுணையாகப் பணியாற்றுவேன் என்றாா் அன்பழகன்.