முகப்பு
விழுப்புரம்

குலை நோய் தாக்குதலால் கருகிய நெல் பயிர்கள்!

விக்கிரவாண்டி அருகே குலை நோய் தாக்குதலில் 100 ஏக்கர் அளவிலான நெல் பயிர்கள் கருகின. இதனால் நஷ்டமடைந்த விவசாயிகள் இழப்பீட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

விக்கிரவாண்டி அருகே குலை நோய் தாக்குதலில் 100 ஏக்கர் அளவிலான நெல் பயிர்கள் கருகின. இதனால் நஷ்டமடைந்த விவசாயிகள் இழப்பீட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
 விக்கிரவாண்டி அருகேயுள்ள ஈச்சங்குப்பத்தைச் சேர்ந்த விவசாயிகள், கடந்த செப்டம்பர் மாதம் சம்பா பருவத்தில் பொன்னி நெல் நடவு செய்திருந்தனர். பயிர் வளர்ந்து கதிர் வந்து குலைசாயும் பருவத்தில், திடீரென கடந்த 15 நாள்களுக்கு முன்பு கருகியது.
 ஈச்சங்குப்பத்தில் மட்டும் 100 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள், மர்ம நோய் தாக்கத்தில் கருகிப் போனதாகவும், அருகே உள்ள மண்டகப்பட்டு உள்ளிட்ட கிராமங்களிலும் நெல் பயிர்கள் கருகி பாதிப்படைந்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கலியன், ராஜேந்திரன், முருகன், சுந்தரம், பூபாலன், விஜயா உள்ளிட்டோர் வேதனை தெரிவித்தனர்.
 இதுதொடர்பாக வேளாண் துறையினரிடமும், மாவட்ட ஆட்சியரையும் நேரில் சந்தித்து, காய்ந்த நெல் பயிர்களை காண்பித்து குறைகளை தெரிவித்தோம். வேளாண் துறையினர் பார்வையிட்டு, குலை நோய் தாக்கம் என்று தெரிவித்துச் சென்றனர்.
 குலை நோய் தாக்கத்தால், 100 ஏக்கர் அளவிலான பயிர்கள் முற்றிலும் பதராகி கருகிப் போனதால், பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 25 முதல் 30 மூட்டைகள் அளவில் விளைந்து, ரூ.40 ஆயிரம் அளவில் வருவாய் ஈட்டக்கூடிய நிலையில், இந்த குலை நோய் தாக்கத்தால், 80 சதவீதம் பயிர் வீணாகிவிட்டது. இதனால், ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
 தற்போது, கதிர்வராமல் உள்ள பயிர்களில் மருந்து தெளித்து காப்பாற்றப்பட்டுள்ளது. இது போல் ஏற்கெனவே நோய் தாக்குதல் வந்ததில்லை. இதனால் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளோம். இதனை ஈடு செய்திடும் வகையில், அரசு சார்பில், உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றனர்.
 இது குறித்து, மாவட்ட வேளாண் இணை இயக்குநர் செல்வராஜிடம் கேட்டபோது, ஈச்சங்குப்பம் பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குலை நோய் தாக்கம் ஏற்பட்டு 50 ஏக்கர் அளவில் பாதிப்புள்ளது. லேசான தாக்குதல் உள்ள வயல்களிலிருந்து, சிறிது சேதாரங்களுடன் நெல் அறுவடை செய்திட முடியும்.
 பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து, நோய் பரவலைத் தடுத்து நடவடிக்கை எடுத்துள்ளோம். விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தால், உரிய இழப்பீட்டை பெற்றிருக்கலாம். ஆனால், பலர் பயிர் காப்பீடு செய்யாமல் இருந்துள்ளனர். எனினும், அரசு இழப்பீடு வழங்க தலைமையகத்துக்கு பரிந்துரைத்து அனுப்பியுள்ளோம் என்றார்.
 
 

முழு கட்டுரையைப் படிக்க →