ஓய்வு பெற்ற சர்க்கரை ஆலை ஆய்வாளர் வீட்டில் திருட்டு
விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற சர்க்கரை ஆலை ஆய்வாளர் வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு தங்கம், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற சர்க்கரை ஆலை ஆய்வாளர் வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு தங்கம், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அருகே பெருந்திட்ட வளாகத்தை அடுத்த ராயல் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (60). கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன், கும்பகோணத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 நாள்களுக்கு முன்பு கோவிந்தன் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கும்பகோணத்துக்கு சென்றார்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை கோவிந்தன் வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டுக் கிடந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து அவருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, கோவிந்தன் வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த சுமார் 4 பவுன் தங்க நகைகள், அரைக் கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.