சின்னசேலம் அருகே பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்து: மாணவிகள் காயம்
சின்னசேலம் அருகே தனியார் பள்ளிப் பேருந்து ஏரியில் கவிழ்ந்ததில் மாணவிகள் காயமடைந்தனர்.
சின்னசேலம் அருகே தனியார் பள்ளிப் பேருந்து ஏரியில் கவிழ்ந்ததில் மாணவிகள் காயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள அம்மைஅகரம் பகுதியில் தனியார் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்குச் சொந்தமான பேருந்து புதன்கிழமை காலை சின்னசேலம் பகுதிக்கு உள்பட்ட கீழ்க்குப்பம், எஸ்.நாரையூர் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து, 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு சின்னசேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
பெத்தாசமுத்திரம் ஏரி அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், மாணவிகள் சினேகா, கனிவிழி உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர். காயமடைந்த மாணவிகளை மீட்டு சின்னசேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்த கீழ்க்குப்பம் போலீஸார் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்குச் சென்று பேருந்தை மீட்டனர். இது குறித்து, கீழ்க்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.