முகப்பு
விழுப்புரம்

'108' இரு சக்கர ஆம்புலன்ஸ் சேவைவாரத்தில் ஒரு நாள் முடக்கம்

விழுப்புரம் நகரில் செயல்படுத்தப்படும் '108' இரு சக்கர ஆம்புலன்ஸ் சேவை, வாரத்தில் ஒரு நாள் இயக்கப்படாமல் நிறுத்தப்படுவதால், அவசர உதவி தேவைப்படுவோர் பாதிக்கப்படுகின்றனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

விழுப்புரம் நகரில் செயல்படுத்தப்படும் '108' இரு சக்கர ஆம்புலன்ஸ் சேவை, வாரத்தில் ஒரு நாள் இயக்கப்படாமல் நிறுத்தப்படுவதால், அவசர உதவி தேவைப்படுவோர் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் ஒருங்கிணைந்த அவசர உதவிக்கு '108' என்ற இலவசத் தொலைபேசி எண் செயல்பட்டு வருகிறது. மருத்துவம், தீயணைப்பு, காவல் ஆகிய மூன்று உதவிகளுக்கும் இந்த எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
24 மணி நேரமும் செயல்படும் இந்தச் சேவை எண்ணை அழைத்து மருத்துவ உதவி கோரினால் எந்த இடம், என்ன பிரச்னை எனக் கேட்டறிந்து, ஈ.எம்.ஆர்.ஐ. என்ற நிறுவனத்தின் கீழ் இயங்கும் '108' ஆம்புலன்ஸை அனுப்பி வைப்பர்.
உடல் நலன் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள், விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவ உதவி, முதலுதவி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல் போன்றவற்றுக்கு இந்த ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தலாம்.
தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கும் சென்று சேவையளிப்பதாலும், ஏராளமான உயிர்களைக் காப்பதாலும் 108 ஆம்புலன்ஸ் சேவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன்காரணமாக, தமிழகம் முழுவதும் இந்த வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் '108' நான்கு சக்கர ஆம்புலன்ஸ்கள் 30 வரை செயல்பாட்டில் உள்ளன. எனினும், இதை நகரின் குறுகிய சாலைகளில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில், பெரிய வாகனம் செல்ல முடியாத இடங்களில் இயக்குவது சிரமமாகும். இதற்குத் தீர்வாக, இரு சக்கர '108'
ஆம்புலன்ஸ் தொடங்கப் பட்டுள்ளது. இந்த இரு சக்கர வாகன சேவை விழுப்புரம், திண்டிவனத்தில் செயல்படுகிறது.
விழுப்புரம் நகரை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த '108' இரு சக்கர ஆம்புலன்ஸ், விபத்தில் சிக்கியவர்களை முதலில் அணுகி, தேவையான மருத்துவம், முதலுதவியை வழங்கி வருகிறது. இதில் பணிபுரியும் 'எமர்ஜென்ஸி மெடிக்கல் டெக்னீசியன்' என்ற மருத்துவ உதவியாளர் நேரடியாக களத்துக்கு விரைந்து வந்து சேவையாற்றுகிறார்.
கள்ளக்குறிச்சியில் முதலில் இயங்கி வந்த இந்த இரு சக்கர ஆம்புலன்ஸ் சேவையானது, கடந்த பிப்ரவரி மாதம் முதல் விழுப்புரத்துக்கு மாற்றப்பட்டது.
அரசு அலுவலகங்கள் இயங்குகிற பெருந்திட்ட வளாகம், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கியப் பகுதிகளில் மாரடைப்பு, மயக்கம், விபத்து போன்ற எதிர்பாராத நிகழ்வுகளின்போது, அவசர உதவிக்கு 108-ஐ தொடர்பு கொண்டால் இந்த இரு சக்கர ஆம்புலன்ஸின் மருத்துவ சேவையே முதலில் வந்து சேரும்.
இதில் உள்ள மருத்துவப் பெட்டியில் பஞ்சு, மருந்து, மாத்திரைகள், செயற்கை சுவாசம் வழங்க சிறிய ஆக்ஸிஜன் சிலிண்டர், மாரடைப்பு ஏற்பட்டவரைக் காப்பாற்ற மருந்து போன்றவை உள்ளன.
விழுப்புரம் நகர் முழுவதும் 5 கி.மீ. சுற்றளவில் எப்போதும் வலம் வந்து கொண்டிருக்கும் இந்த வாகனத்தை, திங்கள்கிழமை தோறும் காண முடிவதில்லை. இதனால், சிறிய விபத்துகள் தொடங்கி, குறுகிய சாலைகள் வரையில், வாகன நெரிசலில் '108' நான்கு சக்கர ஆம்புலன்ஸ் வாகனமே செல்ல வேண்டியுள்ளது.
மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் திங்கள்கிழமை, மனு அளிக்க வருபவர்கள், பெருந்திட்ட வளாகத்துக்கு கோரிக்கைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு வருபவர்கள், முதியோர், பெண்கள் அவசர உதவி தேவைப்படின், உடனடியாக எளிதில் அணுகக் கூடிய இருசக்கர ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில்லை. அந்த வாகனத்தை இயக்கி சேவை அளிக்கும் மருத்துவ உதவியாளருக்கு திங்கள்கிழமையன்று வார விடுமுறை எனக் கூறப்படுகிறது.
இதற்கு மாற்று ஏற்பாட்டை செய்யாமல், அவசர சேவையை முடக்கி வைப்பது முறையல்ல. அதன் இன்றியமையாத சேவை அனைத்து நாள்களிலும் மக்களை தடையின்றிச் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →