முகப்பு
விழுப்புரம்

குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்

உளுந்தூர்பேட்டை அருகே சீரான குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் காலிக் குடங்களுடன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 9:15 AM
பகிர்:

உளுந்தூர்பேட்டை அருகே சீரான குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் காலிக் குடங்களுடன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை வட்டம், பாண்டூரில்  5000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  இவர்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. 
இதுகுறித்து கிராம மக்கள்  ஊராட்சி நிர்வாகத்திற்கும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கும் நேரிலும், கடிதம் வாயிலாகவும் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.  இதனால்  ஆத்திரமடைந்த கிராம மக்கள்  உளுந்தூர்பேட்டை - திருவெண்ணெய்நல்லூர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் ஷாகுல் அமீது மற்றும் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீரான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். 
இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் உளுந்தூர்பேட்டை - திருவெண்ணெய்நல்லூர் சாலையில் 45  நிமிடம்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.