முகப்பு
விழுப்புரம்

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: மாணவி விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் கிடைத்ததால் மனமுடைந்த மாணவி, திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் கிடைத்ததால் மனமுடைந்த மாணவி, திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

செஞ்சி அருகே வளத்தியை அடுத்த பெருவளூர் காலனியைச் சேர்ந்தவர் சண்முகம். கூலித் தொழிலாளி. இவரது மகள் 
பிரதீபா (18) (படம்). இவர், கடந்த 2016-2017 ஆம் கல்வியாண்டில், கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 பயின்று, பொதுத் தேர்வில் 1,125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மருத்துவப் படிப்பில் சேரஆர்வமாக இருந்த அவர், முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வை எழுதினார். அதில், 159 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தும், அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லை. எனினும், அவர், மீண்டும் நீட் தேர்வெழுத ஓராண்டாக தீவிர முயற்சி எடுத்துப் படித்து வந்தார். 
அதன்படி, நிகழாண்டும் நீட் தேர்வு எழுதினார். அதன் முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. அதில், கடந்த ஆண்டைவிட மிகக் குறைவாக மதிப்பெண் கிடைத்ததாம். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி பிரதீபா நிகழ் ஆண்டும் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காது எனக் கருதி மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில், திங்கள்கிழமை மதியம் வீட்டில் தனியாக இருந்த பிரதீபா விஷம் குடித்து மயங்கினார். உடனடியாக, அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சண்முகத்துக்கு 3 பிள்ளைகள். இவர்களில் மூத்த மகள் எம்.எஸ்சியும், மகன் பொறியியலும் படித்து வருவது குறிப்பிடத்தக்கது. மாணவி பிரதிபாவின் தற்கொலையால் பெருவளூர் கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →