மயிலம் வட்டார அரசுப் பள்ளிகளில் புத்தகம், சீருடைகள் வழங்கவில்லை
மயிலம் வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு விலையில்லா புத்தகங்கள், சீருடைகளை முழுமையாக வழங்காமல் வட்டாரக் கல்வி அலுவலர் காலம் தாழ்த்துவதாக, மாவட்ட ஆட்சியரகத்தில் ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
மயிலம் வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு விலையில்லா புத்தகங்கள், சீருடைகளை முழுமையாக வழங்காமல் வட்டாரக் கல்வி அலுவலர் காலம் தாழ்த்துவதாக, மாவட்ட ஆட்சியரகத்தில் ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மயிலம் வட்டாரத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டப் பொருளாளர் ஏ.முத்துக்குமரன் தலைமையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகார் மனு வழங்கி கூறியதாவது:
திண்டிவனம் கல்வி மாவட்டம், மயிலம் ஒன்றியத்தில் உள்ள 75-க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், குறிப்பேடுகள், சீருடைகள், காலணிகள், புத்தகப் பைகள் உள்ளிட்ட நல உதவிகளை வட்டாரக் கல்வி அலுவலர் அக்சீலியம்பெலிக்ஸ் முழுமையாக வழங்காமல் காலம் தாழ்த்தி, முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக, பேரணி அரசுப் பள்ளிக்கு சீருடையே வந்துசேரவில்லை. சில பள்ளிகளுக்கு புத்தகங்கள், காலணிகள் சென்றடையவில்லை. பல பள்ளிகளில் புத்தகங்கள், நோட்டுகள் முழுமையாக வழங்கப்படவில்லை. பல பள்ளிகளுக்கு குறைவான எண்ணிக்கையில், விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு வட்டாரக் கல்வி அலுவலர்தான் காரணமாக உள்ளார். இதுகுறித்து விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தகங்கள் உள்ளிட்ட விலையில்லா பொருள்கள் மயிலம் ஒன்றிய பள்ளிகளுக்கு முழுமையாக வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து வட்டாரக் கல்வி அலுவலர் அக்சீலியம்பெலிக்ஸிடம் கேட்டபோது, மயிலம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் சிசிடிவி பொருத்தி, அலுவல் பணிகளை சீர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இதனால், அங்கு ஆசிரியர்கள் தேவையின்றி வரக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளோம். இதனை விரும்பாத ஆசிரியர்கள் தவறாகப் புகார் அளித்துள்ளனர். வட்டாரக் கல்வி அலுவலகத்தில் எந்தத் தவறும் நடைபெறவில்லை. கல்வித் துறையில் ஒதுக்கீடு செய்து வந்துள்ள புத்தகம், சீருடைகள் உடனுக்குடன் வழங்கி விட்டேன். நிலுவையிலுள்ள சில பள்ளிகளுக்கு, கல்வித் துறையிலிருந்து பொருள்கள் வந்ததும் உடனடியாக வழங்கப்படும். இதுதொடர்பாக, வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.
இதுகுறித்து, முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமியிடம் கேட்டபோது, இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.