வருங்கால வைப்பு நிதித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: கட்டுமானத் தொழிலாளர்கள்
பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம்
பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
விழுப்புரத்தில் உடல் உழைப்புத் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு பேரவை சார்பில் மே தின ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலகம் எதிரே கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ம.மருது தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் சா.சங்கர் வரவேற்றார்.
மாவட்ட துணைச் செயலாளர் ரா.நரசிங்கம், மாவட்ட பொருளாளர் ஆர்.கொளஞ்சி, நகரச் செயலாளர் மண்ணாங்கட்டி, திருநாவலூர் ஒன்றியச் செயலாளர் சி.ஜெயபால், உளுந்தூர்பேட்டை ஒன்றியச் செயலாளர் க.ராஜமணிகண்டன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை தொழிலாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.நடராஜன், அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வ.காசிநாதன், உடல் உழைப்புத் தொழிலாளர் ஒருங்கிணைப்பு பேரவை மாநிலத் தலைவர் மணி, மாநிலச் செயலாளர் கு.வெங்கடேசன், மாநில துணைத் தலைவர் ஜி.லோகநாதன், துணைச் செயலாளர் ம.குணன்குடிமஸ்தான், பொருளாளர் த.ரவீந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பஞ்சாட்சரம், வெ.மணிவண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பதிவுபெற்ற கட்டுமானத் தொழில் சங்கங்களுக்கு அரசு சார்ந்த அனைத்து கட்டுமானப் பணிகளையும் ஒப்பந்த அடிப்படையில் வழங்க வேண்டும். பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதித் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.
பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளி எதிர்பாராமல் விபத்திலோ, பணியின்போது கீழே விழுந்தோ உயிரிழந்தால், அவரது குடும்பத்துக்கு விபத்து நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கும் அரசாணையை வெளியிட வேண்டும். தொழிலாளர்களின் விபத்து சிகிச்சை முழுவதையும் ஏற்பதுடன் வேலை இழப்பீட்டு செலவுத் தொகையையும் வழங்க வேண்டும்.
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மீனவர்களைப் போல், மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். திருமண உதவித் தொகையை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, திருச்சி சாலையில் கட்டுமானத் தொழிலாளர்கள் பங்கேற்ற மே தின ஊர்வலம் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் லட்சுமணன் நன்றி
கூறினார்.