மின்வேலியில் சிக்கி விவசாயி சாவு: 4 பேர் கைது
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தார். இதுதொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தார். இதுதொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கண்டமங்கலத்தை அடுத்த திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (63), விவசாயி. இவர், அப்பகுதியில் உள்ள தனது நிலத்தில் சாகுபடி செய்துள்ள கரும்புப் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சனிக்கிழமை இரவு சென்றார். அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரும்பு வயலுக்கு தேடிச் சென்றனர். அப்போது, கரும்பு வயலின் வரப்புப் பகுதியில் சின்னசாமி மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து அறிந்த கண்டமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் நடத்திய விசாரணையில், புதுச்சேரி மாநிலம், சூரமங்கலத்தைச் சேர்ந்த குணசேகரன், அவரது மகன் வீரப்பன் (18), 17 வயதுடைய மற்றொரு மகன், ரங்கசாமி மகன் ஜெயபால் (30) ஆகியோர் சேர்ந்து காட்டுப் பன்றிகளைப் பிடிப்பதற்காக சின்னசாமி விளைநிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.