விழுப்புரம்

பிரசவத்தின் போது பெண், குழந்தை சாவு: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முற்றுகை

DIN

பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணும், வயிற்றிலிருந்த குழந்தையும் திடீரென உயிரிழந்ததால், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை உறவினர்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம்,  திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள பாவந்தூர் ஊராட்சி, மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் முனியன்(34),  கூலித் தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி (24). இவர்களுக்கு புவனேஸ்வரி(4),  கோபிகிருஷ்ணா(2) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.  
இந்த நிலையில், மீண்டும் கர்ப்பமடைந்த மகாலட்சுமி பிரசவத்துக்காக பாவந்தூர் துணை சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். 
இதைத் தொடர்ந்து அருகேயுள்ள இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகாலட்சுமி வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். 
அப்போது, ரத்த இழப்பு ஏற்பட்டு, வயிற்றில் இருந்த குழந்தை இறந்து விட்டதாக சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் அனுப்பி வைக்கப்பட்டார்.
இங்கு பரிசோதனை செய்ததில், குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டதாகவும் தாயை காப்பாற்ற தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
இந்த நிலையில்,  சனிக்கிழமை அதிகாலை மகாலட்சுமியும் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, குழந்தையை வெளியே எடுக்காததால்தான் தாயும் உயிரிழந்து விட்டதாகவும், இந்த உயிரிழப்புகளுக்கு மருத்துவர்களின் அலட்சியப் போக்கே காரணம் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
தகவல் அறிந்து வந்த விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் ஜோதி,  உதவி ஆய்வாளர் சதீஷ்,  சுப்பையா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் 
பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இருப்பினும், உடலை வாங்க மறுத்து அவர்கள் மாலை வரை போராட்டத்தைத் தொடர்ந்தனர். 
இதையடுத்து,  மகாலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  மருத்துவமனை தரப்பில் கூறுகையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் உரிய சிகிச்சை அளித்தும்  மகாலட்சுமி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. பாவந்தூர் துணை சுகாதார நிலையம் முன்பாகவும் மகாலட்சுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
 இந்தச் சம்பவம் தொடர்பாக,  விக்கிரவாண்டி,  திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT