எஸ்.ஐ.க்கு மிரட்டல்: லாரி ஓட்டுநர்கள் இருவர் கைது
வளவனூர் அருகே மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த லாரி ஓட்டுநர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
வளவனூர் அருகே மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த லாரி ஓட்டுநர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகேயுள்ள ஏ.கே.குச்சிப்பாளையம் பகுதியில் லாரியில் மணல் கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை காலை அங்கு சென்றனர்.
அப்போது, அந்த வழியாக வந்த 2 லாரிகளை மடக்கி சோதனையிட முற்பட்டனர். இதற்கு லாரி ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கொலை மிரட்டல் விடுத்தாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர்கள் இரண்டு பேரையும் போலீஸார் பிடித்து விசாரித்ததில், அவர்கள் சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த முத்துக்குமார்(36), மதுரை மேலூரைச் சேர்ந்த முத்துசாமி(50) என்பதும், மணலை திருடி கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இது குறித்து வளவனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முத்துக்குமார், முத்துசாமி ஆகிய இருவரையும் கைது செய்து, லாரிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.