முகப்பு
விழுப்புரம்

தையல் தொழிலாளி அடித்துக் கொலை: மனைவி, மகன் உள்பட மூவர் கைது

கள்ளக்குறிச்சி அருகே குடும்பத் தகராறில் தையல் தொழிலாளியை கட்டையால் அடித்துக் கொலை செய்ததாக மனைவி, மகன் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On : 23 ஜனவரி 2019, 9:46 am IST
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே குடும்பத் தகராறில் தையல் தொழிலாளியை கட்டையால் அடித்துக் கொலை செய்ததாக மனைவி, மகன் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை அடுத்த காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ரவிச்சந்திரன் (41). கள்ளக்குறிச்சியில் தையல் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மாலதி (35). இவர்களது மகன் ராஜதுரை (20). ஆத்தூர் பகுதியில் உள்ள அரசுக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்த ரவிச்சந்திரன், அவரை கண்டித்துள்ளார். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 
இதனால், மனமுடைந்த ரவிச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியேறி, அதே ஊரில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் அருகில் தனது அண்ணன் முருகனுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அங்கு மாலதி, அவரது மகன் ராஜதுரை, மாலதியின் அண்ணன் சுப்பிரமணியன் ஆகிய  மூவரும் சென்று ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டி, கையில் வைத்திருந்த கட்டையால் தாக்கினராம். காயமடைந்த  ரவிச்சந்திரன் 108 அவசர ஊர்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே பதிவு செய்திருந்த கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து, ராஜதுரை, மாலதி, சுப்பிரமணியன் ஆகிய மூவரையும் சின்னசேலம் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.