விழுப்புரம்

"108'அவசர ஊர்தி சேவை 3-ஆம் இடத்தில் விழுப்புரம்

DIN


தமிழகத்தில் இயங்கி வரும் "108' அவசர ஊர்தி மருத்துவ சேவையில்,  விழுப்புரம் மாவட்டம் 4.70 லட்சம் மீட்புப் பணிகளை மேற்கொண்டு மாநில அளவில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளது.
விபத்து, பிரசவம் உள்ளிட்ட அவசர கால மருத்துவ சேவை, மீட்புப் பணிகளுக்காக, தமிழக அரசால் "108' அவசர ஊர்தி சேவை கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த சேவை கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 54 அவசர ஊர்தி வாகனங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இதில், 3 அதிநவீன அவசர ஊர்திகள், 3 குழந்தைகள் சேவைகளுக்கான அவசர ஊர்திகள்,  48 அவசர கால மீட்பு ஊர்திகள், இவை தவிர 2 மோட்டார் சைக்கிள் அவசர ஊர்திகள் ஆகியவை நகரங்கள், பேரூராட்சிகள், விபத்து பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு, சேவையளித்து வருகின்றன.
தமிழகம் முழுவதும் "108' அவசர ஊர்தி சேவைப் பணிகள், ஆண்டு தோறும் கணக்கிடப்பட்டு, அதுகுறித்த விவரம் வெளியிடப்பட்டு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் வரை மேற்கொண்ட கணக்கெடுப்பில்,  விழுப்புரம் மாவட்ட "108' அவசர ஊர்தி சேவை அதிகளவிலான மீட்புப் பணிகளை மேற்கொண்டு மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட  "108' அவசர ஊர்தி சேவை நிர்வாகத்தின் மேலாளர் ஜெயகுமார் கூறியதாவது: இந்த சேவை தொடங்கியதிலிருந்து,  2019-ஏப்ரல் வரை மேற்கொண்ட கணக்கெடுப்பில்,  காஞ்சிபுரம் மாவட்ட "108' அவசர ஊர்தி சேவை, 5 லட்சத்து 47 ஆயிரத்து 751 அவசர அழைப்புகளை ஏற்று, மீட்புப் பணிகளை மேற்கொண்டு தமிழகத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இரண்டாவதாக, வேலூர் மாவட்ட "108' அவசர ஊர்தி சேவை, 4 லட்சத்து 81 ஆயிரத்து 129 அழைப்புகளை ஏற்று மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட "108' அவசர ஊர்தி சேவை,  4 லட்சத்து 70 ஆயிரத்து 516 அவசர கால அழைப்புகளை ஏற்று, மீட்புப் பணிகளை மேற்கொண்டு மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது.  இதில்,  சாலை விபத்தில் 85 ஆயிரத்து 256 மீட்புப் பணிகளையும்,  பிரசவத்துக்கான அழைப்பை ஏற்று 1லட்சத்து 46 ஆயிரத்து 7 முறை கர்ப்பிணிகளை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த சேவை தொடங்கி, கடந்த 10 ஆண்டுகளில் 4.7 லட்சம் மீட்புப் பணிகளை மேற்கொண்டு உயிர்களை காப்பாற்றியுள்ளனர்.  இங்குள்ள மக்களிடம் அவசர ஊர்தி சேவை குறித்து நல்ல விழிப்புணர்வு உள்ளது. மாதம் சராசரியாக 7,500 அழைப்புகள் வரை வருகின்றன என்றார்.
ஜி.பி.எஸ். கருவியால் விரைவான சேவை: தற்போது, அனைத்து "108' அவசர ஊர்திகளிலும் ஜி.பி.ஆர்.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அவசர ஊர்திகள் எங்குள்ளன என்பதை நன்கு தெரிந்துகொள்ள முடியும். இதனால், ஒரு பகுதியிலிருந்து அவசர அழைப்பு வரும் போது, அதனருகே உள்ள அவசர ஊர்தியை ஜி.பி.எஸ். மூலம் தெரிந்து, அவர்களுக்கு தகவல் தெரிவித்து, உடனே மீட்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதனால், அழைப்பு வந்த பிறகு மீட்புக்கான நேரம், ஏற்கெனவே இருந்த 16 நிமிடத்திலிருந்து 14 நிமிடமாகக் குறைந்துள்ளதாக, இந்த சேவைப் பிரிவினர் பெருமிதம் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

SCROLL FOR NEXT