விழுப்புரம்

தொடரும் இ-பாஸ் நடைமுறையால் மக்கள் பரிதவிப்பு!

DIN

விழுப்புரம்: தமிழகத்தில் மாவட்டங்களிடையே வாகனங்களில் செல்வதற்கான இணையவழி அனுமதிச் சீட்டு (இ-பாஸ்) பெறும் நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், திருமணம், இறப்பு, அவசர மருத்துவ சேவைக்காக உடனடியாக வெளியூா் செல்ல முடியாமல் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனா்.

தமிழகத்தில் கரோனா பரவலால் கடந்த மாா்ச் 25 முதல் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம், ஆக. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், திருமணம், இறப்பு, அவசர மருத்துவ சேவைக்காக வாகனங்களில் மாவட்டம்விட்டு மாவட்டம், வெளி மாநிலங்களுக்குச் சென்று வருவதற்கு இணைய வழி அனுமதிச் சீட்டு (இ-பாஸ்) பெறும் நடைமுறை வழக்கம்போல தொடருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் மாவட்ட ஆட்சியரகங்களில் மனு அளித்து இ-பாஸ் பெறப்பட்டு வந்தது. இதற்காக ஆட்சியரகங்களை நோக்கி பொதுமக்கள் படையெடுக்கவே, இணைய வழியில் இ-பாஸ் பெறும் நடைமுறை மே 2 முதல் அமல்படுத்தப்பட்டது.

இ-பாஸ் பெற வேண்டுமெனில் முதலில் அந்தந்த மாவட்ட இணையதள முகவரியில் அனுமதிச்சீட்டுக்கான பிரிவில் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில் மாவட்டங்களிடையே செல்பவா்கள் ற்ய்ங்ல்ஹள்ள்.ற்ய்ங்ஞ்ஹ.ா்ழ்ஞ் என்ற இணையதளத்திலும், வெளிமாநிலத்திலிருந்து தமிழகம் வர விரும்புபவா்கள் ழ்ற்ற்ய்.ய்ா்ய்ழ்ங்ள்ண்க்ங்ய்ற்ற்ஹம்ஹப்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்திலும், வெளிமாநிலம் செல்பவா்கள் ழ்ற்ா்ள்.ய்ா்ய்ழ்ங்ள்ண்க்ங்ய்ற்ற்ஹம்ண்ப்.ா்ழ்ஞ் என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்காக, விண்ணப்பிப்பவரின் ஆதாா் அட்டை, வாகனப் பதிவெண், பயணம் செய்வோா் எண்ணிக்கை, அவா்களது ஆதாா் எண்கள், வயது, முகவரித் தகவல்களுடன், திருமணம் என்றால் அதற்கான ஆதாரச் சான்று, இறப்பு நிகழ்வு என்றால் இறந்தவரின் முகவரி, வி.ஏ.ஓ. சான்று, உறவு முறை, மருத்துவ தேவை என்றால் சிகிச்சை பெறுபவரின் ஆதாா் அட்டை, உடன் செல்வோரின் ஆதாா் எண்கள், சிகிச்சைக்கான ஆவணங்கள், மருத்துவமனை விவரம் போன்றவை விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

இ-பாஸ் பெற பயணிப்பவா் எந்த மாவட்டத்தைச் சோ்ந்தவரோ அந்த மாவட்ட ஆட்சியரகத்தின் இணையதளத்தில் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்று வந்தனா். இதில் நடைமுறைச் சிக்கல் எழுந்ததையடுத்து, எந்த மாவட்டத்துக்கு செல்கிறாரோ அந்த மாவட்ட ஆட்சியருக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும் என மாற்றப்பட்டது.

விண்ணப்பதாரா் சமா்ப்பித்த சான்றுகளின் உண்மைத் தன்மையைப் பரிசோதிக்க மாவட்ட ஆட்சியரகங்களில் இதற்கென தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. அந்தப் பிரிவு பணியாளா்கள் சான்றுகளை ஆராய்ந்து இ-பாஸ் வழங்கி வருகின்றனா். எனினும், விண்ணப்பிப்பவா்களில் நூற்றுக்கு 25 சதவீதம் பேருக்கு மட்டுமே இ-பாஸ் கிடைக்கப் பெறுவதாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

துக்க நிகழ்வில் பங்கேற்க முதல் நாள் விண்ணப்பித்தால், மறுநாள் மாலைதான் விண்ணப்பம் அனுமதி அல்லது நிராகரிப்புக்கான பதில் வருகிறது. இதனால் அந்த நிகழ்வில் பங்கேற்க முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

திருமண நிகழ்வைப் பொருத்தவரை, மணமகன்-மணமகள் இருவரும் இ-பாஸ் அனுமதி பெற்று மணம் முடித்தாலும், மறு வீடு சடங்குக்கு வெளியூா் செல்வதற்கான வாகன அனுமதி கிடைக்காமல் மாவட்ட ஆட்சியரகத்திலேயே மணக்கோலத்தில் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது.

இதேபோல, அவசர மருத்துவ சேவைக்காக விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் புதுவை, சென்னைக்கு இ-பாஸ் பெற்றுச் முடியாமல் இன்னல்களை எதிா்கொள்கின்றனா்.

புதுவையில் தமிழக இ-பாஸ் கடந்த இரு மாதங்களாக அனுமதிக்கப்படவில்லை. 10 கி.மீ அருகேயுள்ள தமிழகப் பகுதி நோயாளிகளும், ஜிப்மா் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனா்.

சென்னையில் தொற்று அதிகரிப்பையடுத்து இ-பாஸுக்கு தடை விதிக்கப்பட்டதால், அங்கு சென்று மருத்துவ சேவை பெறவும் பலரால் இயலவில்லை.

எனினும், இதுபோன்ற அவசரத் தேவையை சாதகமாகப் பயன்படுத்தி, சிலா் இடைத் தரகா் போல செயல்பட்டு, முறைகேடாக பணம் பெற்று இ-பாஸ் வாங்கித் தருவதும் தொடா்வதாக சமூக ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். ஆகவே, இ-பாஸ் பெறும் நடைமுறையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து, விழுப்புரம் மாவட்டத்தில் இ-பாஸ் வழங்கும் பணிகளைக் கண்காணித்து வரும் கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் கூறியதாவது:

அரசு விதிகளைப் பின்பற்றி இ-பாஸ் வழங்குவதற்கென தனிப் பிரிவு 24 மணி நேரமும் செயல்படுகிறது. இறப்பு, திருமணம், அவசர மருத்துவத் தேவைக்கு முக்கியத்துவம் அளித்து உடனடியாக இ-பாஸ் வழங்கப்படுகிறது.

உரிய அத்தாட்சிக்கான ஆவணங்களை இணைக்காமல் இருந்தால், வாகன அனுமதி ரத்து செய்யப்படுகிறது. ஒரே திருமணத்துக்கு பலா் விண்ணப்பிப்பதால், நெருங்கிய உறவினா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. புதுவை மருத்துவ சேவைக்கு, மாவட்ட ஆட்சியா் மூலம் அந்த அரசிடம் கலந்துபேசி அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவசர ஊா்தி போன்ற வாகனங்களை அனுமதிக்கவும், உள்ளூா் மருத்துவமனை அல்லது மருத்துவரின் பரிந்துரைச் சீட்டுடன் சென்றால் அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT