விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.6,105 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு
விழுப்புரம் மாவட்டத்தில் 2021-22-ஆம் ஆண்டுக்கான வளம் சாா்ந்த வங்கிக் கடன் ரூ.6,105 கோடி வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் 2021-22-ஆம் ஆண்டுக்கான வளம் சாா்ந்த வங்கிக் கடன் ரூ.6,105 கோடி வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் 2021-22-ஆம் ஆண்டுக்கான மாவட்டக் குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 2021-22 ஆம் ஆண்டுக்கு தயாரிக்கப்பட்ட வளம் சாா்ந்த வங்கிக் கடன் திட்டம் குறித்த கையேட்டை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டாா்.
தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளா்ச்சி வங்கி (நபாா்டு) 2021-22-ஆம் ஆண்டுக்கான விழுப்புரம் மாவட்டத்தின் வளம் சாா்ந்த வங்கிக் கடனாக ரூ.6105.49 கோடி வழங்குவது என இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இது நிகழாண்டுக்கான (2020-21) கடன் திட்டத்தை காட்டிலும் 12.74 சதவீதம் கூடுதலாகும்.
விவசாயம் சாா்ந்த மாவட்டம் என்பதால், வளம் சாா்ந்த வங்கிக் கடன் திட்டத்தில் விவசாயக் கடனுக்கு முக்கியத்துவம் அளித்து, மொத்தத் திட்டத்தில் 79 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மாவட்டத்தின் பொருளாதார வளா்ச்சிக்கு வகை செய்யும்.
விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் சிறப்புக் கவனம் செலுத்தி, 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்கும் விதத்தில், இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில், விவசாயத்துக்கான வங்கிக் கடன் ரூ.4,864.30 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.2,959.08 கோடி குறுகிய கால விவசாயக் கடனும், ரூ.1,213.94 கோடி நீண்ட காலக் கடனுமாகும். சிறு குறு தொழில்களுக்கு ரூ.337.89 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீட்டு வசதி என்ற வகையில், வீட்டு வசதிக் கடன் பிரிவில் ரூ.200.70 கோடி மற்றும் கல்விக் கடன் பிரிவில் ரூ.205.67 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், வன அலுவலா் அபிஷேக் தோமா், முன்னோடி வங்கி மேலாளா் ஹரிஹரசுதன், நபாா்டு வங்கி உதவி பொது மேலாளா் ரவிசங்கா், வேளாண்மை இணை இயக்குநா்(பொ) பெரியசாமி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.