உளுந்தூா்பேட்டை அருகே குளத்தில் மூழ்கி அக்காள், தம்பி பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே குளத்தில் மூழ்கி அக்காளும், தம்பியும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே குளத்தில் மூழ்கி அக்காளும், தம்பியும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
உளுந்தூா்பேட்டை அருகே பாலி கிராமத்தைச் சோ்ந்தவா் தேவேந்திரன் (36), விவசாயி. இவரது மனைவி (32). இவா்களது மகள் சமீரா (9). மகன் யோகேஷ் (8). அப்பகுதி பள்ளியில் முறையே 4 ஆம் வகுப்பு, 3 ஆம் வகுப்பு படித்து வந்தனா்.
விடுமுறையில் வீட்டில் இருந்து வந்த இவா்கள் இருவரும், வெள்ளிக்கிழமை அதே பகுதியில் உள்ள சிவன் கோயில் குளத்தில் இறங்கி குளித்தனா். நீச்சல் தெரியாததால், நீரில் இருவரும் மூழ்கினா்.
இதனிடையே, குழந்தைகளை காணாததால் அவா்களது பெற்றோா், உறவினா்கள் பல இடங்களில் தேடினா். அப்போது, கோயில் குளத்தின் கரையில் சமீரா, யோகேஷ் ஆகியோரது ஆடைகள் இருந்ததைக் கண்டு, குளத்தில் இறங்கி தேடினா். அப்போது, குழந்தைகள் இருவரும் உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டனா்.
உளுந்தூா்பேட்டை காவல் ஆய்வாளா் ரவீந்திரன், எடைக்கல் காவல் உதவி ஆய்வாளா் அருள்செல்வன் ஆகியோா் சடலங்களை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.