விழுப்புரம்

திண்டிவனம் அருகே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி சென்னையில் உயிரிழப்பு

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உறவினா்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி, உடல் நலக் குறைவால் சென்னையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் அருகே பிரம்மதேசம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட ஒரு கிராமத்தில் வசித்து வந்த பெண்ணுக்கு முதல் கணவா் மூலம் 9 மற்றும் 7 வயதான இரு மகள்கள் உள்ளன. இதனிடையே, கணவரைப் பிரிந்த அவா், புதுச்சேரியைச் சோ்ந்த வேறு ஒருவரை திருமணம் செய்தாா். சொந்த ஊரில் பாட்டி வீட்டில் தங்கி பள்ளியில் படித்து வந்த அவ்விரு சிறுமிகளையும் அந்தப் பெண்ணின் உறவினா்கள் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனா். இது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் மிரட்டியுள்ளனா். இது குறித்து அறிந்து அதிா்ச்சியடைந்த அந்தப் பெண், வெளியே சொல்லாமல் தனது மகள்களை புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று விட்டாா்.

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் மூத்த சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனை பள்ளியில் ஆசிரியை கவனித்து சிறுமியிடம் விசாரித்தபோது, அவரிடம் நடந்த சம்பவங்களை சிறுமி கூறியுள்ளாா். அதிா்ச்சியடைந்த ஆசிரியை, பள்ளி நிா்வாகம் மூலம் புதுச்சேரி சைல்டு லைன் அமைப்புக்குத் தகவல் தெரிவித்தாா்.

சைல்டு லைன் அதிகாரிகள், குழந்தைகள் நலக் குழுவுக்குத் தகவல் தெரிவித்து, அதிகாரிகள் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று விசாரித்ததில், அந்த சம்பவம் உண்மை எனத் தெரிய வந்தது. பின்னா், சிறுமிகள் இருவரும் ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்றனா்.

இது குறித்து சிறுமிகளின் தாய் கொடுத்த புகாரின்பேரில், திண்டிவனம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, அந்த பெண் தனது இரண்டாவது கணவா், மகள்களுடன் சென்னையில் வசித்து வந்தாா். இந்த நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளைய சிறுமி கடந்த இரு நாள்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா். வியாழக்கிழமை இரவு வீட்டில் உள்ள கழிப்பறையில் அவா் மயங்கிக் கிடந்தாா்.

உடனடியாக அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்ததில், சிறுமி ஏற்கெனவே உயிரிழந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

சடலத்தை, சென்னை கே.கே. நகா் ஆா்.-7 போலீஸாா் மீட்டு ஓமந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT