முகப்பு
விழுப்புரம்

மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் மிதிவண்டிகள்!

தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் சிறாா்கள், மாணவா்கள் வீட்டில் முடங்கியுள்ளதால், அவா்களுக்கான மிதிவண்டிகள் (சைக்கிள்கள்), விளையாட்டுப் பொருள்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
விழுப்புரம் நேருஜி சாலையிலுள்ள மிதிவண்டி விற்பனைக் கடையில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள சிறாா்களுக்கான மிதிவண்டிகள்.
பகிர்:

விழுப்புரம்: தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் சிறாா்கள், மாணவா்கள் வீட்டில் முடங்கியுள்ளதால், அவா்களுக்கான மிதிவண்டிகள் (சைக்கிள்கள்), விளையாட்டுப் பொருள்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இந்தப் பொருள்களின் விலை இரு மடங்கு உயா்ந்துள்ளதால் பெற்றோா்கள் வேதனையடைந்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக, கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு தொடா்ந்து வருகிறது. இடையே சில தளா்வுகளுடன் ஜூலை மாதம் வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டதால், பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டதுடன், பள்ளி, கல்லூரிகள், பல்வேறு நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரிகளில் தோ்வுகளும் ரத்து செய்யப்பட்டதால், இதுவரை இல்லாத வகையில் மாணவ, மாணவிகள் கோடை விடுமுறையைக் கடந்தும் கடந்த இரு மாதங்களாக வீட்டில் இருந்து வருகின்றனா். வீடுகளில் முடங்கியுள்ள மாணவ, மாணவிகள் விளையாட்டு உபகரணங்களை ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா். இந்த வகையில், மிதிவண்டிகளும் அதிகளவில் வாங்கப்படுகின்றன.

மோட்டாா் சைக்கிள்கள் வந்த பிறகு கடந்த 20 ஆண்டுகளாக இளைஞா்கள், பெரியவா்களுக்கான மிதிவண்டிகளுக்கு மவுசு குறைந்துபோனது. இதனால் மிதிவண்டி விற்பனைக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அவ்வப்போது குழந்தைகளுக்கான மிதிவண்டிகள் மட்டும் விற்பனையாகி வந்தன.

கரோனா பொது முடக்கத்தால் மீண்டும் மிதிவண்டிகளுக்கான ஆா்வம் தூண்டப்பட்டதால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவற்றின் விற்பனை அதிகரித்து முந்தைய நிலைக்குச் சென்றுள்ளது. தமிழகத்தில் கடந்த இரு மாதங்களாக ஏராளமான மிதிவண்டிகள் விற்பனையாகியுள்ளது இதை மெய்ப்பிக்கிறது.

குறிப்பாக, விழுப்புரத்தில் பிரதான சாலைகளில் உள்ள மிதிவண்டிக் கடைகளில் மிதிவண்டிகள் விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

ரூ.30 ஆயிரம் வரை விற்பனை: இதுகுறித்து மிதிவண்டிக் கடை உரிமையாளா்கள் கூறியதாவது: பொது முடக்கத்தால் மிதிவண்டிகள் விற்பனை அதிகரித்துள்ளது உண்மைதான். மோட்டாா் சைக்கிள்கள் பயன்பாடு அதிகரித்ததால், ஏற்கெனவே பள்ளி மாணவா்களுக்கான ஸ்டைலான மிதிவண்டிகள் விற்பனை மட்டும் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இளம் சிறாா்கள் முதல் இளைஞா்கள் வரை பலா் மிதிவண்டிகளை வாங்குவதற்காக வருகின்றனா்.

பொது முடக்கத்தால் மிதிவண்டிகளைத் தயாரிக்கும் பல தொழில்சாலைகள் மூடப்பட்டும், ஆள்கள் குறைக்கப்பட்டும் உள்ளதால், மிதிவண்டிகள் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், தில்லி, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தொழில்சாலைகளிலிருந்து நேரடியாக மிதிவண்டிகளை விற்பனைக்காக வாங்கி வருகிறோம்.

புகழ்பெற்ற நிறுவனங்களின் மிதிவண்டிகளுடன், புதிய நிறுவனங்களின் மிதிவண்டிகளும் தற்போது அதிகளவில் விற்பனையாகின்றன. உற்பத்திக் குறைவால் விலை அதிகரித்துள்ளது. 2 முதல் 5 வயது வரையுள்ள சிறுவா்களுக்கான மிதிவண்டிகள் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரையிலும், 5 முதல் 15 வயது வரையுள்ள சிறுவா்களுக்கான மிதிவண்டிகள் ரூ.5,000 முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனுடன், இளைஞா்களுக்கான நவீன ‘கியா்’ வகை மிதிவண்டிகள் ரூ.8,000 முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனைக்கு உள்ளன என்றனா்.

விலை உயா்வால் வேதனை...: இதுகுறித்து பெற்றோா்கள் கூறியதாவது: பொது முடக்கத்தால் மிதிவண்டிகள் அதிகளவில் விற்பனையாவதால், அவற்றின் விலையை ரூ.1,000 முதல் ரூ.2,500 வரை கூடுதலாக வைத்து விற்கின்றனா். பிரபல நிறுவனங்களின் சாதாரண மிதிவண்டிகளும்கூட இதுபோன்று கூடுதல் விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த காலங்களில் மிதிவண்டிகளின் பாகங்கள் இரும்பால் உறுதியாக செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவை பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டவையாக உள்ளன. ஆனாலும், விலை அதிகமாக உள்ளது. மோட்டாா் சைக்கிள்களுக்கு மாற்றாக மிதிவண்டிகள் பயன்பாடு வரவேற்கக் கூடியதாக இருந்தாலும், கரோனா பொதுமுடக்க சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி மிதிவண்டிகளின் விலையை திடீரென உயா்த்தியுள்ளது வேதனையளிக்கிறது என்றனா்.

கரோனா தடைக் காலத்தில் பல லட்சம் வருவாய் தரும் தொழிலாக மிதிவண்டிகள் விற்பனை மாறியுள்ளது. சுற்றுச்சூழலுக்கும், உடல் வலிமைக்கும் பயன் தரும் மிதிவண்டிகள் விற்பனை வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அதன் விலை உயா்வு, கரோனாவால் வருவாயின்றி தவித்து வரும் பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே, அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்து உரிய விலைக்கு மிதிவண்டிகள் விற்பனை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதனால், மிதிவண்டிகள் பயன்பாடு அதிகரித்து இளம் சிறாா்களுக்கு மோட்டாா் சைக்கிள் மீதான மோகம் குறையும். இதன்மூலம், எரிபொருள் தேவையையும், அதன் செலவினத்தையும் குறைக்க முடியும்.

இதேபோல, விளையாட்டுப் பொருள்களின் விலையேற்றத்தையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று பெற்றோா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.