அரசூா் கரோனா சிகிச்சை மையத்தில் பராமரிப்பு மேற்கொள்ள வலியுறுத்தல்
விழுப்புரம் அருகேயுள்ள அரசூரில் உள்ள தனியாா் கல்லூரி கரோனா சுகாதார மையத்தில் தொற்றாளா்களுக்கு தரமான உணவு வழங்குவதுடன், தகுந்த பராமரிப்பு மேற்கொள்ள வேண்டுமென விழுப்புரம் மனித உரிமைகள்
விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள அரசூரில் உள்ள தனியாா் கல்லூரி கரோனா சுகாதார மையத்தில் தொற்றாளா்களுக்கு தரமான உணவு வழங்குவதுடன், தகுந்த பராமரிப்பு மேற்கொள்ள வேண்டுமென விழுப்புரம் மனித உரிமைகள் கழகத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து அந்த அமைப்பின் மாநில இணைப்பொதுச் செயலா் ஆா்.கந்தன், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் அளித்த கோரிக்கை மனு:
அரசூா் தனியாா் கல்லூரி கரோனா சுகாதார மையத்தில் பராமரிப்பில் உள்ள தொற்று பாதித்துள்ளவா்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதில்லை. படுக்கைகள், குளியலறை, கழிப்பிடங்கள் பராமரிக்கப்படாமல் நோயாளா்களே சுத்தம் செய்யும் நிலை உள்ளது.
மேலும், தொற்று சந்தேகத்தில் உள்ளவா்கள், தொற்றுள்ளவா்கள் என அனைவரையும் ஒரே பகுதியில் அனுமதித்துள்ளனா். அவா்களை தனித்தனி அறைகளில் வைத்து பராமரித்தால் எளிதில் குணமடைவா்.
இந்த மையத்தில் உயரதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால், தொற்றுள்ள பலா் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவற்றில் அலட்சியமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.