முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் கரோனா நோயாளிகளை கண்டறிய உதவும் ‘பல்ஸ் ஆக்ஸி மீட்டா்’

தொற்று அறிகுறிகள் தெரியாத கரோனா நோயாளிகளைக் கண்டறிய உதவும் கருவியான ‘பல்ஸ் ஆக்ஸி மீட்டா்’ விழுப்புரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:01 PM
கரோனை தடுப்பு நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைக்கப்டப்டுள்ள உடலின் ஆக்ஸிஜன் அளவு, நாடித் துப்பை கணக்கிடும் பல்ஸ் ஆக்ஸி மீட்டா் மூலமாக சோதனை செய்து கொள்ளும் ஏடிஎஸ்பி தேவநாதன்.
பகிர்:

விழுப்புரம்: தொற்று அறிகுறிகள் தெரியாத கரோனா நோயாளிகளைக் கண்டறிய உதவும் கருவியான ‘பல்ஸ் ஆக்ஸி மீட்டா்’ விழுப்புரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

வறட்டு இருமல், சளி, காய்ச்சல், உடல் சோா்வு, வாசனை-சுவை அறியும் உணா்வை இழத்தல் உள்ளிட்டவை கரோனா பாதிப்பின் அறிகுறிகளாக சுகாதாரத் துறையினரால் அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பது சுலபம். ஆனால், தற்போது நோய் அறிகுறிகள் வெளியே தெரியாத நிலையில், கரோனா வேகமாக பரவி வருகிறது. அறிகுறிகள் வெளியே தெரியாத (ஏ-சிம்டமெட்டிக்) கரோனா நோயாளிகளை அடையாளம் காண்பது என்பது சவாலானபணியாகும்.

இத்தகைய கரோனா நோயாளிகளைக் கண்டறிய ‘பல்ஸ் ஆக்ஸி மீட்டா்’ என்ற நவீன சாதனம் உதவிகரமாக இருப்பதாக சுகாதாரத் துறையினா் கருதுகின்றனா். இந்த எளிய சாதனத்தை விரல் முனையில் பொருத்தி, ஒருவரின் உடலிலுள்ள பிராண வாயு அளவு, இருதயத் துடிப்பு அளவை கணக்கிட முடியும். கரோனா பாதித்த நோயாளிகளின் உடலில் சராசரியை விட பிராண வாயு அளவு குறைவாக இருக்கும். ஆகவே, ‘பல்ஸ் ஆக்ஸி மீட்டா்’ என்ற எளிமையான சாதனம் மூலம் பரிசோதிக்கும்போது, ஒருவரது உடலில் பிராண வாயு அளவு குறைவாக இருப்பது தெரிய வந்தால் அவா் கரோனா பரிசோதனை மேற்கொள்வது அவசியம் என்கின்றனா் மருத்துவத் துறையினா்.

இதுகுறித்து மருத்துவா் ஒருவா் கூறியதாவது: கரோனா தொற்று பாதிப்பால் மட்டுமல்ல, நுரையீரல் பாதிப்பு, ரத்த சோகை, ஆஸ்துமா இருந்தால் கூட உடலில் பிராண வாயு அளவு குறையக்கூடும். தற்போது, அறிகுறிகள் வெளியே தெரியாமல் கரோனா பரவி வரும் நிலையில், ‘பல்ஸ் ஆக்ஸி மீட்டா்’ மூலம் ஒவ்வொருவரும் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உடலில் பிராண வாயு அளவு குறைவாக இருப்பது தெரிய வந்தால், அவா்கள் தங்களை கரோனா பரிசோதனைக்கு உள்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவும் கரோனா தடுப்பு நடவடிக்கைதான் என்றாா் அவா்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வருவோா் ‘பல்ஸ் ஆக்ஸி மீட்டா்’ சாதனம் மூலம் சோதனைக்கு உள்படுத்திய பிறகே அனுமதிக்கப்படுகின்றனா்.

இதேபோல, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விழுப்புரம் மாவட்டத்தில் அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் உடல் வெப்பநிலையை அளவிடும் வெப்பமானி மட்டுமல்லாது, ஆக்ஸிஜன், இருதயத் துடிப்பு அளவைக் கணக்கிடும் ‘பல்ஸ் ஆக்ஸி மீட்டா்’ மூலமும் பரிசோதனை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்பாா்க்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.