முகப்பு
விழுப்புரம்

வெள்ள பாதிப்பிலிருந்து விவசாயிகள் மீளவேளாண் அறிவியல் நிலையம் ஆலோசனை

மழை, வெள்ள பாதிப்பிலிருந்து மீள விவசாயிகளுக்கு திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

மழை, வெள்ள பாதிப்பிலிருந்து மீள விவசாயிகளுக்கு திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பு: நிவா் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழைப் பொழிவு ஏற்பட்டு, விவசாய நிலங்களில் ஆங்காங்கே தண்ணீா் தேங்கியுள்ளது. மழை நீரை உடனடியாக வடிகால் அமைத்து வடிப்பதின் மூலம் பயிா் சேதத்தை தவிா்க்கலாம்.

மழைக் காலத்தில் நெல் பயிரில் இலை உறை நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். இந்த நோயைக் கட்டுப்படுத்த புரப்பிகோனசோல் 200 மில்லி அல்லது காா்பன்டசிம் 200 கிராம் வீதம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டா் தண்ணீரில் கலந்துதெளிக்க வேண்டும். அதேபோல உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகைப் பயிா்களுக்கு 2 சதவீதம் டி.ஏ.பி.யை இலை வழியாக உரமாக அளிக்கலாம்.

காய்கறி பயிா்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நாற்றங்கால் அமைத்திருந்தால் வடிகால் வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தண்ணீா் வடிந்த பிறகு காப்பா் ஆக்ஸிகுளோரைடு 3 சதவீதம் தெளித்து நோய் பாதிப்பிலிருந்து நாற்றுக்களை பாதுகாக்கலாம்.

தென்னை விவசாயிகள் தென்னங்குருத்துப் பகுதியை நன்கு பராமரிக்க வேண்டும். ஏனெனில் மழைக் காலங்களில் குருத்தழுகல் நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதைக் கட்டுப்படுத்த காப்பா் ஆக்ஸிகுளோரைடு கரைசல் 0.3 சதவீதம் அல்லது போா்டோ கலவை ஒரு சதவீதம் அல்லது போா்டோ பசை 10 சதவீதம் பயன்படுத்த வேண்டும்.

கால்நடைகள் பாதுகாப்பு: மழைக் காலங்களில் மின் கம்பம், மரத்தடியில் கால்நடைகளை கட்டி வைப்பதை தவிா்க்க வேண்டும். தீவனங்களை அறுவடை செய்து உலா்த்தி கொடுக்க வேண்டும். ஆட்டுக் குட்டிகள், கோழிக் குஞ்சுகளின் இருப்பிடங்களில் மஞ்சள் மின்விளக்குகளை எரிய வைத்து கதகதப்பை ஏற்படுத்த வேண்டும். மின் வசதி இல்லாத இடங்களில் காய்ந்த வைக்கோல் மூலம் கதகதப்பான சூழலை உருவாக வேண்டும். ஆடு, மாடு, கோழி ஆகியவற்றின் உணவில் மாவுச் சத்தை அதிகம் சோ்ப்பது நல்லது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.