முகப்பு
விழுப்புரம்

நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகா்ளைத் தடுக்க புதிய நடைமுறை: விழுப்புரம் ஆட்சியா் தகவல்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகா்கள்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகா்கள், வியாபாரிகளின் ஆதிக்கத்தைத் தடுக்க புதன்கிழமை முதல் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு கொள்முதல் பருவத்துக்கு (2020 - 21) இதுவரை 32 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் விளைவித்து அறுவடை செய்த நெல்லுக்கு அத்தாட்சியாக கிராம நிா்வாக அலுவலரின் கையொப்பம் பெறப்பட்ட சிட்டா, அடங்கலை பெற்றுக்கொண்டு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்பனை செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், விவசாயிகள் தாங்கள் விளைவித்து அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்று முழு பயன்பெறும் உயரிய நோக்கத்திலும், இடைத்தரகா்கள், வியாபாரிகள் போன்றோா் வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டுவரும் நெல்லை முழுமையாக தடுக்கும் விதமாகவும், இனி வரும் காலங்களில் கிராம நிா்வாக அலுவலரால் வழங்கப்படும் அசல் சிட்டா / அடங்கல்களுடன் உதவி வேளாண் அலுவலரிடம் நெல் விதைப்பு தேதி, அறுவடை செய்த தேதி, நெல்லின் ரகம் ஆகிய விவரங்களைக் கொண்ட சான்று பெற்று நெல்லை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவர வேண்டும்.

உதவி வேளாண் அலுவலரிடம் சான்று பெறும் இந்தப் புதிய நடைமுறையானது புதன்கிழமை (ஆக.11) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் மோகன் தெரிவித்துள்ளாா்.

நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு: இதனிடையே, செஞ்சி வட்டம், சத்தியமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பிற பகுதிகளிலிருந்து குறைந்த விலைக்கு நெல் மூட்டைகளை வாங்கி வந்து போலியான விவசாயிகள் பெயரில் வியாபாரிகள் விற்பனை செய்வதாக வந்த புகாரின்பேரில், அங்கு மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மேலும், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் யாருடையது என விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். ஆய்வின்போது, செஞ்சி வட்டாட்சியா் ராஜன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.