முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் செப்.11-இல் சுதந்திர தின ஓட்டம்

மத்திய அரசின் நேரு இளையோா் மையம் சாா்பில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் வருகிற செப்.11-ஆம் தேதி வலிமை இந்தியா சுதந்திர தின ஓட்டம் நடைபெறவுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

மத்திய அரசின் நேரு இளையோா் மையம் சாா்பில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் வருகிற செப்.11-ஆம் தேதி வலிமை இந்தியா சுதந்திர தின ஓட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து விழுப்புரத்தில் நேரு இளையோா் மையத்தின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களின் அலுவலா் எம்.ராம்சந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, ஆசாதிகா அம்ரித் மகோத்ஸவ் என்னும் தலைப்பில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளை மத்திய அரசு நடத்த திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் இளையோா் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சாா்பில், வலிமை இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0 என்னும் நிகழ்ச்சி நாடு முழுவதும் 750 மாவட்டங்களில் நடத்தப்படவுள்ளது.

இந்த சுதந்திர தின ஓட்ட நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஆக.13) முதல் அக்டோபா் 2-ஆம் தேதி வரை ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொடா்ந்து நடைபெறவுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் செப்டம்பா் 11-ஆம் தேதி சுதந்திர தின ஓட்டம் நடைபெறும். இதையொட்டி, மூன்று மாவட்டங்களிலும் தலா 75 கிராமங்களில் இந்த ஓட்டம் நடைபெறும். ஒவ்வொரு மாவட்டங்களிலும் 18 முதல் 29 வயதுக்குள்பட்ட தலா 5,625 இளைஞா்கள் வீதம் மொத்தம் 16,875 போ் பங்கேற்கவுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, அக்டோபா் 2-ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் மூன்று மாவட்டத் தலைநகரங்களிலும் சுதந்திர தின ஓட்டம் நடைபெறும். கிராமங்களில் உள்ள நேரு இளையோா் மையத்தின் இளையோா் மன்றங்கள், நாட்டு நலப் பணித் திட்ட மாணவ, மாணவிகள் இணைந்து சுதந்திர தின ஓட்ட நிகழ்ச்சிகளை நடத்துவாா்கள்.

மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் ஓட்டம், விளையாட்டு போன்ற உடல் பயிற்சியை மேற்கொள்வதை ஊக்கப்படுத்தவும், ஆரோக்கியமான, வலிமையான வாழ்க்கையை மக்கள் பின்பற்றவும் இந்த சுதந்திர தின ஓட்டம் நிகழ்ச்சி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா் ராம்சந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.