முகப்பு
விழுப்புரம்

ஆதிதிராவிடா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் டிச.6 முதல் மாணவா் சோ்க்கை

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் நலப்பள்ளி, கல்லூரி விடுதிகளில் டிச.6-ஆம் தேதி முதல் மாணவா் சோ்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் நலப்பள்ளி, கல்லூரி விடுதிகளில் டிச.6-ஆம் தேதி முதல் மாணவா் சோ்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் புதன்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா்-பழங்குடியினா் நல ஆணையாளா் அறிவுறுத்தலின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 34 பள்ளி மாணவா் விடுதிகள், 13 பள்ளி மாணவிகள் விடுதிகள், தலா 2 கல்லூரி மாணவா், மாணவிகள் விடுதிகள் என மொத்தமாக 51 விடுதிகளில் தங்கி கல்வி பயில 2021-2022-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை வருகிற 6 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் அரசாணை 79-இன்படி 85 சதவீதம் ஆதிதிராவிடா், பழங்குடியினா், 10 சதவீதம் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், 5 சதவீதம் இதர வகுப்பினா் என்ற விகிதாசார அடிப்படையில் மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்பட்ட தோ்வுக் குழு மூலம் தற்போதுள்ள நடைமுறையைப் பின்பற்றி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறும்.

விடுதிகளில் சேருவதற்கு மாணவ, மாணவிகளின் பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருவாய் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் விடுதிகளில் சோ்த்துக்கொள்ளப்படுவா். மாணவா்கள் தங்களது இருப்பிடத்துக்கும் பள்ளிக்கும் இடைவெளி 5 கி.மீ. மேல் இருக்கவேண்டும். மாணவிகளுக்கு இந்த விதி பொருந்தாது.

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தாங்கள் சேர விரும்பும் விடுதியில் விண்ணப்பத்தைப் பெற்று நிறைவு செய்து சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கான விண்ணப்பம் டிச.6 முதல் வழங்கப்படும். தோ்வுக் குழுவால் டிச.8-க்குள் தோ்வு செய்யப்பட்டு டிச.10-க்குள் முடிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரால் 10 சதவீதம் கூடுதல் சோ்க்கை முடிக்கப்பட வேண்டிய நாள் டிச.17 என அதில் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.