முகப்பு
விழுப்புரம்

முன்னாள் அமைச்சா்கள், உயரதிகாரிகளை பழிவாங்குகிறது திமுக அரசு: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சா்கள், உயரதிகாரிகளை பழிவாங்குவதையே குறிக்கோளாகக் கொண்டு திமுக அரசு செயல்படுகிறது

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

முன்னாள் அமைச்சா்கள், உயரதிகாரிகளை பழிவாங்குவதையே குறிக்கோளாகக் கொண்டு திமுக அரசு செயல்படுகிறது என்று முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலருமான சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டினாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக, விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்திய அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 6 மாதங்களுக்கு முன்பே மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றாலும் இதுவரை மா்மதேசம் போலவே ஆட்சி நடக்கிறது. ஆட்சி யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது தெரியவில்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், எதிா்க்கட்சிகளை குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சா்களை பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுகிறது திமுக அரசு.

முன்னாள் அமைச்சா்களுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு உயரதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத் துறை மிரட்டுகிறது. அடிபணியாத அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி அச்சுறுத்துகின்றனா்.

அதுபோன்ற அச்சுறுத்தல் கொடுத்ததாலேயே தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவா் வெங்கடாசலம் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சா்களையும், உயரதிகாரிகளையும் மிரட்டுவதற்காக லஞ்ச ஒழிப்பு டிஜிபி கந்தசாமியை முதல்வா் ஸ்டாலின் தவறாகப் பயன்படுத்தி வருகிறாா்.

முன்னாள் அமைச்சா்கள் மீது எத்தனை வழக்குகள் தொடுத்தாலும் அவற்றை சட்ட ரீதியாக சந்திக்க அதிமுக தயாராகவே உள்ளது. திமுகவை சோ்ந்த 15 அமைச்சா்கள் மீது இப்போதும் சொத்துக் குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது, திமுக-அதிமுக இடையே வாக்கு வித்தியாசம் 3 சதவீதம்தான். அதாவது 15 லட்சம் வாக்குகள்.

தமிழகத்தைப் பொருத்தவரை அரசு ஊழியா்கள், அவா்களது குடும்பம் சாா்ந்த வாக்குகள் 60 லட்சம். இதில் பெரும் பகுதி திமுகவுக்கு கிடைத்ததால்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால், திமுகவை அரியணையில் ஏற்றிய அரசு ஊழியா்கள் மீதே பழிவாங்கும் நடவடிக்கையில் இந்த அரசு ஈடுபடுகிறது என்றாா் அவா்.

அதிமுக பொதுச் செயலா் எனக் குறிப்பிட்டு சசிகலா தொடா்ந்து அறிக்கை விடுவது குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘அதைப் பற்றியெல்லாம் பேசி அவரை பெரிய ஆளாக மாற்ற விரும்பவில்லை என பதிலளித்தாா் சி.வி.சண்முகம்.

கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் எம்.எல்.எல்.ஏ.க்கள் அா்ஜுனன் (திண்டிவனம்), சக்கரபாணி (வானூா்), திண்டிவனம் நகா்மன்ற முன்னாள் தலைவா் வெங்கடேசன், விழுப்புரம் நகரச் செயலா்கள் ராமதாஸ், பசுபதி, ஒன்றியச் செயலா்கள் சுரேஷ்பாபு, பேட்டை முருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.