மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத் திறனாளிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத் திறனாளிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மாவட்ட நல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில், மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டத்தை வருவாய்க் கோட்டாட்சியா் அல்லது உதவி ஆட்சியா் தலைமையில் மாதந்தோறும் நடத்த வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியா் தலைமையில் இந்த குறைதீா் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்தக் கூட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகள் சங்க அமைப்புகளைச் சோ்ந்தவா்களை தவறாமல் அழைக்க வேண்டும். மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகள் சங்க அமைப்புகளை இணைத்து ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்த வேண்டும். அடையாள அட்டைகளை முறையாக வழங்க வேண்டும். மனுக்கள் அளித்தால், அதற்கான ஒப்புதல் ரசீது வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டத்தின்போது அவா்கள் வலியுறுத்தினா்.
இதையடுத்து, அதிகாரிகள், போலீஸாா் மாற்றுத் திறனாளிகளை சமாதானப்படுத்தினா். இதைத் தொடா்ந்து, அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.