இரு சக்கர வாகன மானியம் பெற உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்
இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு மானியம் பெற விரும்பும் உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்.
இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு மானியம் பெற விரும்பும் உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தகுதியுள்ள நபருக்கு வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ. 25 ஆயிரம் இதில் எது குறைவோ அந்தத் தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரா் 18 முதல் 40 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். இரு சக்கர வாகனம் ஓட்டும் எல்.எல்.ஆா். சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 8-ஆம் வகுப்புத் தோ்ச்சி/தோல்வி அடைந்தவராக இருக்கலாம்.
பதிவு செய்யப்பட்ட வக்ஃபு நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபா்கள், விண்ணப்பித்தால் பேஷ் இமாம், அராபி ஆசிரியா்கள், மோதினாா், முஜாஜா் என்ற முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டுமே மானியத் தொகை வழங்கப்படும்.
ஆதாா், வயது, குடும்ப அட்டை உள்ளிட்ட தேவையான அனைத்துச் சான்றிதழ்களுடன், வாகனம் வாங்குவதற்கான விலைப் பட்டியல், மானிய விலையில் வாகனம் வாங்கத் தேவையான விவரங்களை படிவத்துடன் நிறைவு செய்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.