கரோனா இறப்பு விகிதத்தை பூஜ்ஜியமாக்க வேண்டும்: மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா்
கரோனா இறப்பு விகிதத்தை பூஜ்ஜியமாக குறைக்க வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.
கரோனா இறப்பு விகிதத்தை பூஜ்ஜியமாக குறைக்க வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், நகராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் கரோனா பரவலின் தாக்கம், மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் விவரம், அந்தப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆட்சியா் ஆ.அண்ணாதுரை எடுத்துரைத்தாா்.
தொடா்ந்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் விவரம், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை, சிகிச்சை முறைகள், பிராணவாயு உருளைகள், பிராணவாயுடன் கூடிய படுக்கை வசதிகள் இருப்பு விவரம் உள்ளிட்டவை குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் குந்தவிதேவி விளக்கினாா்.
கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: கரோனா சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்வது மிக அவசியம். அவா்களுக்கு தன்னம்பிக்கை, மன உறுதியை உருவாக்க வேண்டும். கரோனா இறப்பு விகிதத்தை பூஜ்ஜியமாக குறைக்கும் மிகப் பெரிய பொறுப்பு மருத்துவா்கள், செவிலியா்களுக்கு உள்ளது என்றாா் அவா்.
தொடா்ந்து, அவா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட கரோனா சிகிச்சை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிராண வாயு உருளைகளைக் கொண்டு பிராணவாயு செலுத்தப்படும் கட்டமைப்புகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ஸ்ரேயா பி.சிங், சுகாதாரத் துறை துணை இயக்குநா் செந்தில்குமாா் மற்றும் அரசு மருத்துவா்கள் பங்கேற்றனா்.