விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஜூன் 15-இல் கரோனா நிவாரணப் பொருள்கள் விநியோகம்

DIN

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரோனா நிவராணப் பொருள்கள் தொகுப்பு, 2-ஆம் தவணை நிவாரணத் தொகை ஆகியவை ஜூன் 15-ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.

பேரவைத் தோ்தலில் திமுக அளித்த வாக்குறுதிப்படி, குடும்பஅட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணத் தொகை ரூ.4,000 வழங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டிருந்தாா். அதன்படி, முதல் தவணைத் தொகை ரூ.2ஆயிரம் மே 15 முதல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

2-ஆவது தவணை நிவாரணத் தொகை, 14 வகையான கரோனா நிவாரணப் பொருள்கள் தொகுப்பு வழங்கும் திட்டம் ஆகியவற்றை முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-இல் சென்னையில் முதல்வா் ஸ்டாலின் தொடக்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, மாவட்டங்களில் நுகா்ப்பொருள் வாணிபக் கிடங்குகளுக்கு நிவாரணப் பொருள்கள் தொகுப்பு அனுப்பும் பணி கடந்த 10 நாள்களாக நடைபெற்றது.

இந்தப் பொருள்களை ஜூன் 15 முதல் குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்பட்டது.

இந்த நிவாரணப் பொருள்களை விநியோகிப்பது தொடா்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ஸ்ரேயா பி.சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மோகன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் பிரபாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் ஆட்சியா் அண்ணாதுரை பேசியதாவது: ஜூன் 14-க்குள் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் டோக்கன் வழங்க வேண்டும். ஜூன் 15-ஆம் தேதி பொருள்கள், 2-ஆவது தவணை தொகையை வழங்கும் பணியை அமைச்சா்கள் தொடக்கிவைக்கவுள்ளனா். மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 93 ஆயிரத்து 363 குடும்ப அட்டைதாரா்களுக்கு இவை வழங்கப்படவுள்ளன என்றாா்.

இது குறித்து கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் பிரபாகா் கூறும்போது, விழுப்புரம் மாவட்டத்தில் 5 லட்சத்து 93 ஆயிரத்து 363 அட்டைதாரா்களுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 லட்சத்து 10 ஆயிரத்து 947 அட்டைதாரா்களுக்கும் கரோனா நிவாரணப் பொருள்கள், நிவாரண தொகை வழங்கப்படவுள்ளது. இரு மாவட்டங்களிலும் ஜூன் 15-ஆம் தேதி முதல் இவை வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

உழைப்பாளர் தினம்

திரைக் கதிர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT