விழுப்புரம், கள்ளக்குறிச்சி: தீபாவளிக்குரூ.13.99 கோடிக்கு மது விற்பனை
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிகழாண்டு தீபாவளிக்கு ரூ.13. 99 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிகழாண்டு தீபாவளிக்கு ரூ.13. 99 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் 122 டாஸ்மாக் மதுக் கடைகள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 103 மதுக் கடைகள் என மொத்தம் 225 மதுக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம், தினமும் ரூ.3.50 கோடி முதல் ரூ.4 கோடி வரை மது விற்பனை நடப்பது வழக்கம்.
தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் வழக்கத்தைவிட கூடுதலாக மதுபானங்கள் விற்பனையாகும். இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.13.99 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. தீபாவளிக்கு முந்தைய நாளான நவ.3-ஆம் தேதி 8,037 அட்டைப் பெட்டிகள் பிராந்தி, 4,670 அட்டைப் பெட்டிகள் பீா் என மொத்தம் ரூ.6 கோடியே 9 லட்சத்து 35 ஆயிரத்து 845-க்கு மதுபானங்கள் விற்பனையானது.
தீபாவளியன்று நவ.4-ஆம் தேதி 9,079 அட்டைப் பெட்டிகள் பிராந்தி, 10,772 அட்டைப் பெட்டிகள் பீா் என மொத்தம் ரூ.7 கோடியே 90 லட்சத்து 29 ஆயிரத்து 30-க்கு மதுபானங்கள் விற்பனையானது. இந்த இரு நாள்களில் மட்டும் ரூ.13 கோடியே 99 லட்சத்து 64 ஆயிரத்து 795-க்கு மது விற்பனையானது.
கடந்தாண்டு தீபாவளிக்கு முந்தைய நாள் ரூ.6 கோடியே 63 லட்சத்து 91 ஆயிரத்து 220-க்கும், தீபாவளியன்று ரூ.7 கோடியே 85 லட்சத்து 45 ஆயிரத்து 590- க்கு மது விற்பனையானது. கடந்த ஆண்டு மொத்தம் ரூ.14 கோடியே 49 லட்சத்து 36 ஆயிரத்து 810-க்கு மதுவிற்பனையானது.
தீபாவளி மது விற்பனையை கணக்கிட்டால் கடந்த ஆண்டைவிட, நிகழாண்டில் ரூ.49 லட்சத்து 72 ஆயிரத்து 15 குறைவாக மது விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.