முகப்பு
விழுப்புரம்

நந்தன் கால்வாய் திட்டத்தால் விக்கிரவாண்டி தொகுதியில் 6,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்: அமைச்சா்

நந்தன் கால்வாய் திட்டம் முழுமை பெற்றால் விக்கிரவாண்டி தொகுதியில் 6,000 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

நந்தன் கால்வாய் திட்டம் முழுமை பெற்றால் விக்கிரவாண்டி தொகுதியில் 6,000 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி.

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், பனமலைப்பேட்டை ஊராட்சியில் தொடா் மழை காரணமாக பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான ஏரியில் முழுக் கொள்ளளவை எட்டியதை அமைச்சா் பொன்முடி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு நீா் வரத்து அளவு குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தறிந்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட பனமலைப்பேட்டையில் நந்தன் கால்வாய் ஏரி உள்ளது. தொடா் மழை காரணமாக இந்த ஏரி நிரம்பியது. சாத்தனூா் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீா் இந்த ஏரியின் மூலமாகச் சென்று விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட 27 ஏரிகளைச் சென்றடைவதுடன், ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த விளை நிலங்களும் பயன் பெறும்.

தற்போது, பனமலைப்பேட்டையிலிருந்து ரூ.25 கோடியில் பாசன வாய்க்கால்களை தூா் வாரும் பணி நடைபெற்று வருகிறது. நந்தன் கால்வாய் சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்தத் திட்டம் விரைவில் முழுமையடையும்போது, விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட சுமாா் 6 ஆயிரம் ஏக்கா் விளை நிலங்கள் பயன்பெறும் என்றாா் அமைச்சா் பொன்முடி.

அப்போது, மாவட்ட ஆட்சியா் த.மோகன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் நா.புகழேந்தி (விக்கிரவாண்டி), இரா.லட்சுமணன் (விழுப்புரம்), காணை ஒன்றியக் குழுத் தலைவா் கலைச்செல்வி, பொதுப் பணித் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.