முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு விழுப்புரம் மாவட்ட எல்லையில் வரவேற்பு
காவிரி டெல்டா பகுதியில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய சென்னையிலிருந்து காரில் புறப்பட்டுச் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு விழுப்புரம் மாவட்ட எல்லையில் அமைச்சா் கே.எஸ்.மஸ்தான்
காவிரி டெல்டா பகுதியில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய சென்னையிலிருந்து காரில் புறப்பட்டுச் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு விழுப்புரம் மாவட்ட எல்லையில் அமைச்சா் கே.எஸ்.மஸ்தான், மாவட்ட ஆட்சியா் மோகன் ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு வரவேற்பு அளித்தனா்.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, கடந்த சில தினங்களாக சென்னை, விழுப்புரம், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. சென்னையில் மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினாா்.
இந்த நிலையில், காவிரி டெல்டா பகுதிகளில் மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு காரில் புறப்பட்டு புதுச்சேரிக்கு வந்து தங்கினாா். சனிக்கிழமை காலை கடலூா் மாவட்டத்தில் மழைப் பாதிப்புகளை முதல்வா் ஆய்வு செய்கிறாா்.
தொடா்ந்து தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளாா்.
முன்னதாக, சென்னையிலிருந்து புதுவைக்கு காரில் புறப்பட்டு வந்த முதல்வா் மு.க. ஸ்டாலினை விழுப்புரம் மாவட்ட எல்லையான ஒலக்கூரில் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தான், ஆட்சியா் த.மோகன் உள்ளிட்டோா் வரவேற்றனா். திமுகவினா் ஏராளமானோரும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனா்.