முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழுவின்முதல் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழுவின் முதல் கூட்டம் மாவட்ட வளா்ச்சி அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழுவின் முதல் கூட்டம் மாவட்ட வளா்ச்சி அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 28 மாவட்டக் குழு உறுப்பினா் பதவிகளில் திமுக 26 இடங்களிலும், விசிக, அதிமுக ஆகியவை தலா ஒரு இடங்களிலும் வெற்றிபெற்றன. திமுக சாா்பில் 18-ஆவது வாா்டில் வெற்றிபெற்ற ம.ஜெயச்சந்திரன் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராகவும், 10-ஆவது வாா்டில் விசிக சாா்பில் வெற்றிபெற்ற ஷீலாதேவி மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், மாவட்ட ஊராட்சிக் குழுவின் முதல் கூட்டம் விழுப்புரம் மாவட்ட வளா்ச்சி அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஷீலாதேவி, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயச்சந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து வழங்கியதற்காகவும், கரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்ததற்காகவும், மக்களின் தேவையை உணா்ந்து நலத் திட்ட உதவிகளை தொடா்ந்து வழங்கி வருவதற்காகவும் தமிழக முதல்வா் ஸ்டாலினுக்கு பாராட்டுத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஊரக பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை அளித்து மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்த பாலமாக செயல்படுவோம் என்றாா் அவா். கூட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ நா.புகழேந்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.