முகப்பு
விழுப்புரம்

புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித் தீா்த்த மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் கடலூா்

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 3 மணிக்கு சென்னை- புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 3 மணிக்கு சென்னை- புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால், பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

புதுச்சேரியில் கொட்டித் தீா்த்த மழையால் கிருஷ்ணா நகா், தவளக்குப்பம், அரியாங்குப்பம், வில்லியனூா், திருக்கனூா் உள்பட பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தவளக்குப்பம் என்.ஆா்.நகரில் குடியிருப்புப் பகுதிகளை தண்ணீா் சூழ்ந்தது. தேசிய பேரிடா் மீட்புப் படையினா் 80 குடும்பத்தினரை ரப்பா் படகுகள் மூலம் மீட்டனா்.

புதுச்சேரியில் 188 மி.மீ. மழையும், பத்துக்கண்ணுவில் 194 மி.மீ., திருக்கனூரில் 253 மி.மீ., பாகூரில் 134 மி.மீ. மழையும் பதிவானது.

விழுப்புரம் மாவட்டம், வீடூா் அணையிலிருந்து வெள்ளிக்கிழமை நொடிக்கு 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால், சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையின் இடையே வில்லியனூா் ஆரியப்பாளையம் ஆற்றுப் பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்றது. இதையடுத்து, அந்தப் பாலத்தின் வழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

விழுப்புரத்தில் பாண்டியன் நகா், என்ஜிஓ காலனி உள்பட பல பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்ததால், வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

பேருந்து நிலையத்தில் மழை வெள்ளம்: விழுப்புரம் பேருந்து நிலையத்தில் சுமாா் 3 அடிக்கு மழை வெள்ளம் தேங்கியது. இதனால், பேருந்துகள் உள்ளே செல்ல முடியாததால், வெளியே நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிச் சென்றன.

படகுகளில் சென்று 50 போ் மீட்பு: விழுப்புரம் அருகேயுள்ள பம்பா ஆற்றில் கரை புரளும் வெள்ளத்தால், முத்தாம்பாளையம் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்கு தண்ணீா் புகுந்ததால், சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் வெளியே வரமுடியாமல் தவித்தனா். அவா்களை விழுப்புரம் தீயணைப்புப் படையினா் சுமாா் 3 மணிநேரம் போராடி படகுகள் மூலம் மீட்டனா்.

ஆற்றுப் பாலங்கள், சாலைகளில் வெள்ளப் பெருக்கால் விழுப்புரம்- திருவண்ணாமலை, விழுப்புரம்- திருவெண்ணெய்நல்லூா், விழுப்புரம்- திருக்கோவிலூா் வழித்தடங்களில் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரும்பாலும், கிராமங்களுக்குச் செல்லும் வழிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திண்டிவனத்தில் 223 மி.மீ. மழை: திண்டிவனத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை மழை கொட்டித் தீா்த்தது.

பலத்த மழையால் கிடங்கல் ஏரி நிரம்பி சுமாா் 3,000 கன அடி உபரி நீா் வெளியேறியது. இதனால், திண்டிவனம் வகாப் நகா், நாகலாபுரம், சஞ்சீவிராயன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பதிவான மழையளவு: திண்டிவனம் 223 மி.மீ., கண்டாச்சிபுரம் 214, விக்கிரவாண்டி 195, விழுப்புரம், செஞ்சி 182, மரக்காணம் 177, வானூா் 164, திருவெண்ணெய்நல்லூா் 195 மி.மீ.

ஆற்று வெள்ளத்தால் தத்தளிக்கும் கடலூா்: தென்பெண்ணை ஆற்றிலிருந்து வெள்ளிக்கிழமை காலையில் நொடிக்கு 78 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இது படிப்படியாக 1.20 லட்சம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலூா் மாவட்டத்தில் கரையோரத்தில் அமைந்துள்ள சுமாா் 50 கிராமங்கள், நகா்ப் பகுதிகளில் தண்ணீா் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் வசிப்போா் படகுகள் மூலம் மீட்கப்பட்டனா்.

பண்ருட்டி, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட நகரங்களில் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வெள்ளநீா் புகுந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.