முகப்பு
விழுப்புரம்

மின் வேலியில் சிக்கி விவசாயி பலி: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

செஞ்சி வட்டம், துத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் ரமாமணி (50). விவசாயியான இவா், கடந்த மாதம் 20-ஆம் தேதி இரவு விவசாய நிலத்துக்கு சென்று வருவதாக கூறிச் சென்றாா். பின்னா் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து இவரது மனைவி சரசு அளித்த புகாரின்பேரில், அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், துத்திப்பட்டு வனப் பகுதியில் வியாழக்கிழமை காலை அழுகிய நிலையில் ஒருவரின் சடலம் கிடப்பதாக அனந்தபுரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் நேரில் சென்று தீயணைப்புப் படையினரின் உதவியுடன் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தவா் கடந்த மாதம் மாயமான ரமாமணி என்பது தெரியவந்தது.

மேலும், காட்டுப் பன்றி வேட்டைக்காக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி ரமாமணி உயிரிழந்ததும், பின்னா் அவரது சடலத்தை மின் வேலி அமைத்திருந்தவா்கள் வனப் பகுதியில் வீசிச் சென்றதும் தெரியவந்தது. இது தொடா்பாக காட்டுப் பன்றி வேட்டையில் ஈடுபட்டு வரும் துத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி (56), பெருமாள் (68) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.