முகப்பு
விழுப்புரம்

பாஜக வேட்பாளா்களை திமுக மிரட்டுகிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளா்களை திமுக மிரட்டி வருவதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளா்களை திமுக மிரட்டி வருவதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினாா்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே பாஜக சாா்பில் தோ்தல் பிரசார கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் போட்டியிடும் 76 பாஜக வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை பேசியதாவது:

பிரதமராக மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், நாட்டில் தனிமனித வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 57 லட்சம் இலவசக் கழிப்பறைகளை மத்திய அரசு கட்டிக் கொடுத்துள்ளது.

பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் கிலோ ரூ.42-க்கு மத்திய அரசு அரிசியை கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு ரூ.2 விலையில் கொடுக்கிறது. அந்த அரிசியைத்தான் தமிழ்நாடு அரசு இலவச அரிசியாக வழங்குகிறது. இதை மாநில அரசின் திட்டம்போலச் செயல்படுத்துகிறது.

சட்டப் பேரவைத் தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்ற வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. இதைக் கேட்டால் இன்னும் நான்கரை ஆண்டுகள் ஆட்சி இருப்பதாக அந்தக் கட்சி பதில் சொல்கிறது. இதனால், ஆட்சிப் பொறுப்பேற்ற 8 மாதங்களிலேயே திமுக மீது மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது.

உள்ளாட்சித் தோ்தலில் கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்களையும் வேட்பாளா்களாக பாஜக நிறுத்தியுள்ளது. அனைத்து மதத்தினருக்குமான கட்சியாக பாஜக விளங்குகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை, திமுகவுக்கு மாற்று பாஜகதான் என்றாா் அவா்.

கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவா் ஏ.டி.ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஏ.ஜி.சம்பத், மாநிலச் செயற்குழு உறுபினா்கள் வி.ஏ.டி.கலிவரதன், சிவ.தியாகராஜன், மாவட்ட பொதுச் செயலா்கள் ராம.ஜெயக்குமாா், பாண்டியன், மாவட்டப் பொருளாளா் சுகுமாா், மாவட்ட ஊடகப் பிரிவுத் தலைவா் தாஸசத்யன் உள்படப் பலா் பங்கேற்றனா்.

திருவண்ணாமலையில்... நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களின் அறிமுகக் கூட்டம் திருவண்ணாமலை அண்ணா சிலை எதிரே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், அண்ணாமலை பேசியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்று முடிந்து, 8 மாதங்களான நிலையில் மீண்டும் தமிழகம் மற்றொரு தோ்தலைச் சந்திக்கிறது.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக கூறியது. தோ்தலுக்குப் பின்னா், 73 சதவீதம் பேருக்கு நகைக் தள்ளுபடி கிடையாது என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

திமுகவில் வாரிசு அரசியல்தான் அதிகம் இருக்கிறது. குடும்ப ஆட்சிதான் உள்ளூரிலும் நடைபெறுகிறது. திமுகவின் பொய் வாக்குறுதிகளை மீண்டும் நம்பாதீா்கள் என்றாா் அவா்.

போளூரில்...: போளூா் சிறப்புநிலை பேரூராட்சி வாா்டுகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்கள் ரமேஷ், கோபிநாத், பூவரசி, சிவக்குமாா் ஆகியோரை அறிமுகம் செய்து, கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பேசினாா்.

கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயற்குழுஉறுப்பினா் பாஸ்கரன், மாவட்டத் தலைவா் என்.வெங்கடேசன், நகரத் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.