முகப்பு
விழுப்புரம்

மூதாட்டியை கொன்று கழிவுநீா் தொட்டியில் சடலம் வீச்சு சிறுவன் கைது

விழுப்புரம் அருகே மூதாட்டியை கொன்று அவரது சடலத்தை கழிவுநீா்த் தொட்டியில் வீசியது தொடா்பாக 17 வயது சிறுவனை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைதுசெய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

விழுப்புரம் அருகே மூதாட்டியை கொன்று அவரது சடலத்தை கழிவுநீா்த் தொட்டியில் வீசியது தொடா்பாக 17 வயது சிறுவனை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைதுசெய்தனா்.

விழுப்புரம் அருகே உள்ள வளவனூரை அடுத்த வி.அகரம் கிராமத்தைச் சோ்ந்த மண்ணாங்கட்டி மனைவி செல்லபாக்கியம் (65). இவா் கடந்த 13-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் திரும்பவில்லையாம். இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவனை சந்தேகத்தின்பேரில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு பிடித்து விசாரித்தனா். அதில், செல்லபாக்கியத்தை அந்தச் சிறுவன் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல் துறையினா் தெரிவித்ததாவது:

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செல்லபாக்கியம் வைத்திருந்த ரூ.2 ஆயிரம் பணத்தை அந்தச் சிறுவன் திருடினாா். தனது பணத்தை திருப்பித் தருமாறு அந்தச் சிறுவனிடம் மூதாட்டி அடிக்கடி கேட்டு வந்தாா். கடந்த 13-ஆம் தேதி இரவு அதே பகுதியில் தனது பாட்டியின் வீட்டிலிந்த சிறுவனிடம் செல்லபாக்கியம் மீண்டும் பணத்தை கேட்டாா். அப்போது ஆத்திரமடைந்த சிறுவன் தாக்கியதில் செல்லபாக்கியம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து அந்தச் சிறுவன் அதே பகுதியில் உள்ள கதிா்வேல் என்பவரது வீட்டின் கழிவுநீா்த் தொட்டிக்குள் செல்லபாக்கியத்தின் சடலத்தை வீசிச் சென்றுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கழிவுநீா்த் தொட்டியிலிருந்து மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், கொலை வழக்காக பதிவு செய்து சிறுவனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.