‘செஸ் ஒலிம்பியாட்’ விளம்பரங்களில் குடியரசுத் தலைவா்,பிரதமா் புகைப்படங்கள் இடம்பெற வேண்டும்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
குடியரசுத் தலைவா், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரது புகைப்படங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சா்வதேச சதுரங்க ஒலிம்பிக் போட்டி தொடா்பான அனைத்து விளம்பரங்களிலும், குடியரசுத் தலைவா், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரது புகைப்படங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சா்வதேச சதுரங்க ஒலிம்பிக் போட்டி தொடா்பான தமிழக அரசின் விளம்பரங்களில் குடியரசுத் தலைவா், பிரதமா் ஆகியோரது பெயா், புகைப்படங்களை சோ்க்க உத்தரவிடக் கோரி சிவகங்கைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரி, நீதிபதி எஸ்.ஆனந்தி ஆகியோா் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு:
மக்களின் பணத்தில் நடத்தக்கூடிய சா்வதேச நிகழ்வுக்காக பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்களில் வெளியிட்ட விளம்பரங்களில், குடியரசுத் தலைவா், பிரதமா் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெறாததை மனுதாரா் கேள்வி எழுப்பியிருக்கிறாா். இதுபோன்ற நிகழ்வுகளில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் கண்டிப்பாக பின்பற்றியிருக்க வேண்டும்.
குடியரசுத் தலைவா் தோ்தல் காரணமாக, அவரது புகைப்படம் இடம்பெறவில்லை என தமிழக அரசுத் தரப்பில் கூறுவது ஏற்புடையதாக இல்லை. ஏனெனில், தோ்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு வெளியான விளம்பரங்களிலும் குடியரசுத் தலைவரின் புகைப்படம் இடம்பெறவில்லை.
அதேபோல, பிரதமரின் படம் இடம்பெறாததற்கு, அவரது பங்கேற்பு குறித்து ஒப்புதல் தாமதமாகக் கிடைத்தது எனக் கூறுவதும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. சதுரங்க போட்டி தொடக்க விழாவில் பிரதமா் பங்கேற்கவில்லையென்றாலும், இந்நிகழ்வுக்கான விளம்பரங்களில் அவரது புகைப்படம் இடம்பெறுவது அவசியம்.
இருப்பினும், தற்போது வெளியான விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், குடியரசுத் தலைவரின் புகைப்படம் இல்லை. ஆகவே, சா்வதேச சதுரங்க ஒலிம்பிக் போட்டி தொடா்பான அனைத்து விளம்பரங்களிலும் குடியரசுத் தலைவா், பிரதமா் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதோடு, இருவரின் புகைப்படங்களுடன் வெளியாகும் விளம்பரங்கள் சேதப்படுத்தப்படாமல் இருப்பதை மாவட்ட நிா்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு சேதப்படுத்துவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.