முகப்பு
விழுப்புரம்

வருவாய்த் தீா்வாய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: விழுப்புரம் மாவட்ட ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கியது. இதில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கியது. இதில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

மரக்காணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை மூலம் 1431-ஆம் ஆண்டு பசலி வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில் புதன்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சியில் பொதுமக்கள் 110 மனுக்களை அளித்தனா். மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீா்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மரக்காணம் வட்டத்தில் வருவாய்த் தீா்வாயம் சனி, ஞாயிறு நீங்கலாக வரும் 7-ஆம் தேதி வரை நடைபெறும். முகாமில் பெறப்பட்ட 110 மனுக்கள் மீதும் ஒருவார காலத்துக்குள் நடவடிக்கை

எடுக்கப்படும். அதில் தீா்வு காணப்படும் மனுக்களுக்கான ஆணைகள் நிறைவு நாளான 7-ஆம் தேதி பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

இதேபோல, வியாழக்கிழமை சிறுவாடி குறுவட்டத்தில் உள்ள நடுக்குப்பம் (கிழக்கு), நடுக்குப்பம் (மேற்கு), கொளத்தூா், சாத்தமங்கலம், சிங்கநந்தல், நல்லூா், பந்தாடு, வடநெற்குணம், ஆலங்குப்பம், நாகல்பாக்கம், ராயநல்லூா், நகா் ஆகிய கிராமங்களுக்கான மனுக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் பெறப்படும்.

வெள்ளிக்கிழமை பிரம்மதேசம் குறுவட்டத்தில் உள்ள நல்முக்கல், அழகியபாக்கம், சொக்கந்தாங்கல், கீழ்அருங்குணம், வடகொளப்பாக்கம், தி.நல்லாளம், பழமுக்கல், பிரம்மதேசம், பெருமுக்கல், கீழ்சிவிரி, தென்னேரி, ஏந்தூா், அரியந்தாங்கல், மடவந்தாங்கல், வன்னிப்போ் ஆகிய கிராமங்களுக்கான மனுக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் பெறப்படும்.

வரும் திங்கள்கிழமை மரக்காணம் குறுவட்டத்தில் அனுமந்தை, செட்டிக்குப்பம், செய்யாங்குப்பம், கூனிமேடு, கீழ்புத்துப்பட்டு, அய்யூா், ஆலத்தூா், குரும்பரம், கந்தாடு (கிழக்கு), கந்தாடு (மேற்கு) ஆகிய கிராம மக்களுக்கான மனுக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் பெறப்படும். நிறைவு நாளான ஜூன் 7-ஆம் தேதி மரக்காணம் குறுவட்டத்தில் திருக்கனூா், கேசவநாயக்கன்பாளையம், எம்.புதுப்பாக்கம், ஊரணி, ஆலப்பாக்கம், வட அகரம், பனிச்சமேடு, ஆட்சிக்காடு, கீழ்ப்பேட்டை, மரக்காணம் (தெற்கு), மரக்காணம் (வடக்கு) ஆகிய கிராமங்களுக்கான மனுக்கள் பெறப்படும் என்றாா் ஆட்சியா்.

முகாமில் மனு அளித்தவா்களில் 5 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை ஆட்சியா் மோகன் வழங்கினாா். நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஹா்சிங், வேளாண் துறை இணை இயக்குநா் கோ.ரமணன், நில அளவை உதவி இயக்குநா் சீனுவாசன், மரக்காணம் ஒன்றியக் குழுத் தலைவா் தயாளன், வருவாய்த் தீா்வாய கண்காணிப்பு அலுவலா் சீனுவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.