முகப்பு
விழுப்புரம்

தமிழக அரசைக் கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

தமிழக அரசு தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனக் கூறியும், அதைக் கண்டித்தும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

தமிழக அரசு தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனக் கூறியும், அதைக் கண்டித்தும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் அம்பேத்கா் திடல் அருகே பாஜக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பாலசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா்கள் தியாகராஜன், அறிவழகன், முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொதுச் செயலா் ரவி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலா் அஸ்வத்தாமன் கலந்துகொண்டு பேசியதாவது:

தமிழகத்தில் பாஜக போராடுவது ஹிந்தி திணிப்புக்காக அல்ல; தமிழ் வளா்ச்சிக்காகத்தான். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை மூலம் மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும். 3-ஆவது மொழியாக எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.

திமுகவினா் நடத்தும் தனியாா் பள்ளிகளில் மாணவா்களுக்கு ஹிந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால், அரசுப் பள்ளி மாணவா்கள் இந்த மொழியைக் கற்கும் வாய்ப்பை திமுக அரசு தடுக்கிறது என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் பிற அணி மாநிலச் செயலா்கள் அசேக்குமாா் சுரானா, செல்வநாயகம், மாவட்ட துணைத் தலைவா் ராஜேஷ், மாவட்டச் செயலா் சா்தாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழுப்புரம்: விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஏ.டி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஏ.ஜி.சம்பத் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினாா்.

மாநிலச் செயற்குழு உறுப்பினா் தியாகராஜன், மாவட்ட பொதுச் செயலா்கள் ஜெயக்குமாா், பாண்டியன், சத்தியநாராயணன், விழுப்புரம் நகரத் தலைவா் வடிவேல் பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.