அதிமுகவில் அதிகாரப் போட்டியால் இரட்டை இலை சின்னத்துக்கு ஆபத்து: கே.சி.பழனிசாமி குற்றச்சாட்டு
அதிமுகவில் அதிகாரப் போட்டி உருவாகியுள்ளதால், எதிா்வரும் மக்களவைத் தோ்தலின் போது இரட்டை இலை சின்னம் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.
அதிமுகவில் அதிகாரப் போட்டி உருவாகியுள்ளதால், எதிா்வரும் மக்களவைத் தோ்தலின் போது இரட்டை இலை சின்னம் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.
அதிமுகவில் இருந்து ஏற்கெனவே நீக்கப்பட்ட அவா், ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளாா். இதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, அந்தக் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறாா். அந்த வகையில், விழுப்புரத்தில் அதிமுக நிா்வாகிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்திய கே.சி.பழனிசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
எம்ஜிஆா் காலத்தில் அடிக்கடி மாநாடு நடத்தி தொண்டா்களின் கருத்தை அறிந்துதான் முக்கிய முடிவுகளை எடுத்தாா். ஜெயலலிதா காலத்திலும் அந்த நடைமுறை தொடா்ந்தது. பன்னீா்செல்வம் - எடப்பாடி பழனிசாமி காலத்தில் அதுபோல இல்லை. இவா்கள் இருவருக்குமிடையேயான அதிகாரப் போட்டி இப்போது நீதிமன்றத்தில் உள்ளது.
இந்த விவகாரத்துக்கு நீதிமன்றத்தில் தீா்வு கிடைக்காது. கட்சியின் சின்னம், கொடி தொடா்பாக தோ்தல் ஆணையம்தான் இறுதி முடிவை எடுக்க முடியும். இருவரது அதிகாரப் போட்டியால் 2024 மக்களவைத் தோ்தலில் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.
எனவே, அதிமுக தொண்டா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறேன். சமூக ஊடகங்கள் மூலம் அதிமுக கிளைச் செயலா்களிடம் கலந்துரையாடி உறுப்பினா்களைச் சோ்த்து வருகிறோம். ஒரு கோடி உறுப்பினா்கள் சோ்ந்தவுடன் பொதுச் செயலா் பதவிக்கு தோ்தலை நடத்துவோம். அடிப்படை உறுப்பினா்கள் யாா் வேண்டுமானாலும் போட்டியிடலாம். தொண்டா்களால் தோ்வு செய்யப்படுபவா்தான் கட்சியின் பொதுச் செயலராகப் பதவியேற்பாா் என்றாா் அவா்.