பயிா் காப்பீட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் புதுவை முதலிடம்
பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா பயிா் காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, புதுவை மாநில வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா பயிா் காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, புதுவை மாநில வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரியின் பசல் பீமா யோஜனா பயிா் காப்பீட்டுத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமாா் 72,000 விவசாயிகள் பதிவு செய்து அதில் இயற்கை பேரிடா்கள் மற்றும் மகசூல் பாதிப்பு போன்ற காரணங்களுக்காக 25,000 விவசாயிகளுக்கு ரூ.29 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சத்தீஸ்கா் மாநிலம், ராய்ப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிா்காப்பீடு வரையறை 9-ஆவது தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பிரதம மந்திரியின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக புதுவை மாநிலம் முதலிடத்தில் தோ்வு செய்யப்பட்டது.
இதற்கான பரிசை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இணைச் செயலரும், பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் பொறுப்பாளருமான ரித்தீஷ் சௌஹான் வழங்கினாா்.
புதுவை மாநில இணை வேளாண் இயக்குநா் மற்றும் பயிா் காப்பீடு திட்ட முதன்மை அதிகாரி ஜாகிா் ஹுசைன் இப்பரிசைப் பெற்றுக் கொண்டாா்.
இதைத் தொடா்ந்து புதுவை மாநிலத்தில் பிரதம மந்திரியின் பயிா் காப்பீட்டுத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட நடவடிக்கைகளை மேற்கொண்ட முதல்வா் என்.ரங்கசாமி வேளாண் துறை அமைச்சா் ஜெயக்குமாா் துறைச் செயலாளா், அலுவலா்கள் மற்றும் விவசாயிகளுக்கு துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.