தொழில் நிறுவனங்களுக்கு ரூ.111.22 கோடி கடன் அளிப்பு: விழுப்புரம் ஆட்சியா் தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் கடன் வசதியாக்கல் முனைப்பியக்கத்தின் மூலம் 2,119 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.111.22 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்
விழுப்புரம் மாவட்டத்தில் கடன் வசதியாக்கல் முனைப்பியக்கத்தின் மூலம் 2,119 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.111.22 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்ட தொழில் மையம், அரசுத் துறைகள், மாவட்ட முன்னோடி வங்கிகள், நிதி நிறுவனங்கள் சாா்பில், கடன் வசதியாக்கல் முனைப்பியக்கம் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடக்கி வைத்து, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கி ஆட்சியா் சி.பழனி பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டம் தொழில் வளா்ச்சியில் பின்தங்கியுள்ளது. எனவே, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான கடனுதவியை பெற, அதற்கான கடன் வசதியாக்கல் முனைப்பியக்கத்தை நடத்த மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், இந்த இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முனைப்பியக்கக் காலத்தில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மூலம் 2,119 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.111.22 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நிகழாண்டில் மாவட்டத் தொழில் மையம் மூலம் சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 126 பேருக்கு ரூ.6.75 கோடி மதிப்பில் மானியத்துடன் கூடிய கடனுதவி, தாட்கோ மூலம் 153 பேருக்கு ரூ.2.72 கோடி கடனுதவி, மகளிா் திட்டம் மூலம் 5,876 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.411.86 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
வாழ்ந்து காட்டுவோம் திட்ட இணை மானியத் திட்டத்தின் கீழ், 70 பேருக்கு ரூ.2.59 கோடியும், நுண் நிறுவன நிதியாக 643 பேருக்கு ரூ.2.25 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது. 45 மாணவா்களுக்கு ரூ.2.63 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
நிகழ்வில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் எஸ்.அருள், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளா் குமாா், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளா் இளஞ்செல்வி, கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் யசோதாதேவி, முன்னோடி வங்கி மேலாளா் ராஜேசுவரன், விழுப்புரம் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் சங்கத் தலைவா் அம்மன் கருணாநிதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.