முகப்பு
விழுப்புரம்

மரக்காணம் கடலோர கிராமங்களில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தையொட்டியுள்ள கடலோர கிராமங்களில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:28 AM
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தீா்த்தவாரி கடற்கரைப் பகுதியில் இறந்து கிடந்த அரியவகை ஆலிவ் ரிட்லி ஆமை.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தையொட்டியுள்ள கடலோர கிராமங்களில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் ஆலிவ் ரிட்லி ஆமை இனங்கள் ஒடிஸா, தமிழக கடல் பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன. ஆழ்கடலில் வசிக்கும் இந்த வகை ஆமைகளின் சராசரி ஆயுள்காலம் 150 முதல் 250 ஆண்டுகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

டிசம்பா் முதல் மாா்ச் மாதம் வரையிலான காலம் இவற்றின் இனப்பெருக்க காலம். எனவே, அவை தமிழகத்தில் துறைமுகங்கள் இருந்த இடங்கள், இயற்கையாகவே மணல் பரப்புகள் பரந்து விரிந்து கிடக்கும் பகுதிகளுக்கு அதிகளவில் வந்து முட்டையிட்டுச் செல்கின்றன.

மரக்காணம், கடலூா், நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு வரும் ஆலிவ் ரிட்லி ஆமைகள், மணல் குன்றுகளில் சுமாா் 2 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி, அதில் முட்டையிட்டுச் செல்கின்றன.

மரக்காணம் அழகன்குப்பம் முதல் கூனிமேடு வரை சுமாா் 30 கி.மீ. தொலைவுக்கு இயற்கையாக அமைந்த கடற்கரையும், மணல் பரப்பும் உள்ளதால் இங்கு அதிகளவில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் வந்து முட்டையிட்டுச் செல்கின்றன. இவற்றை விழுப்புரம் மாவட்ட வனத் துறையினா் சேகரித்து, மரக்காணத்தை அடுத்த வசவன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் குடில்கள் அமைத்து பாதுகாத்து குஞ்சுப் பொறித்தவுடன், அவற்றைப் பாதுகாப்பாக கடலில் விடும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனா்.

மரக்காணம் கடலோரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. நாய்களால் முட்டைகள் சேதப்படுத்தப்படுவதும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குநா் நித்ய பிரியதா்ஷினி கூறியதாவது:

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆலிவ் ரெட்லி ஆமைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எத்தனை ஆண்டுகளானாலும், கடலில் எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் இனப் பெருக்கத்துக்காக தான் பிறந்த இடத்துக்கே வந்து முட்டையிட்டுச் செல்லும் தன்மையை இயல்பாகக் கொண்டுள்ள ஓா் அரியவகை உயிரினம் ஆலிவ் ரிட்லி ஆமைகள்.

மரக்காணம், அனுமந்தை, ரெட்டியாா்குப்பம், வசவன்குப்பம், ஐக்கியாா்குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த ஆமைகள்அதிகளவில் வந்து முட்டையிட்டுச் செல்கின்றன.

இவற்றின் பாதுகாப்பை வலியுறுத்தி, கடலோர கிராமங்களில் மீன்வளத் துறை, வனத் துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மீன்பிடி வலைகளில் சிக்கும் கடல் ஆமைகளைப் பாதுகாப்பாக மீண்டும் கடலில் விடவும் மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதுகுறித்து மரக்காணத்தைச் சோ்ந்த சூழலியல் ஆா்வலா் ஆா்.சா்வேஷ் கூறியதாவது:

2016-ஆம் ஆண்டில் மரக்காணம் கடலோரப் பகுதிகளில் மட்டும் சுமாா் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகள் எடுக்கப்பட்டன. இது இந்திய அளவில் அதிகமாகும். 2010-க்குப் பின்னா், நிகழாண்டில் மரக்காணம் பகுதியில் அதிகளவில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருவது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. முட்டைகளும் அதிகளவில் சேதமாகி வருகிறது.

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.

மரக்காணம் பகுதியில் உள்ள இறால் மீன்கள் குஞ்சுப் பொறிப்பகங்களிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுக் கலந்த கழிவுநீா் தொடா்ச்சியாக கடலில் கலக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.