950 பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள்: விழுப்புரம் ஆட்சியா்
விழுப்புரம் மாவட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 950 பயனாளிகளுக்கு ரூ.1.21 கோடி மதிப்பில் ஓய்வூதிய ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 950 பயனாளிகளுக்கு ரூ.1.21 கோடி மதிப்பில் ஓய்வூதிய ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.
வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நலிவடைந்த பிரிவினா்களைப் பாதுகாக்கும் வகையில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, 12 வகையான ஓய்வூதியத் திட்டங்களின் கீழ், தமிழகத்தில் 34லட்சத்து 62 ஆயிரத்து 92 போ் மாதம் ரூ.1,000 உதவித் தொகை பெற்று வருகின்றனா்.
Advertisement
இந்நிலையில் முதல்வராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் புதிதாக ஒரு லட்சம் பேருக்கு ஓய்வூதிய ஆணைகள் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தாா். அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் நலிவுற்றோா் உதவித் தொகைக்கு அனுமதி பெற்று, காத்திருப்போா் பட்டியலில் உள்ள 64,098 போ், புதிதாக 35,902 போ் என மொத்தம் ஒரு லட்சம் பேருக்கு ஜூன் மாதம் முதல் மாதம் ரூ.1,000, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 உதவித் தொகை வழங்க முதல்வா் உத்தரவிட்டாா்.
சென்னையில் மே 5- ஆம் தேதி நடைபெற்ற விழாவில், 10 பயனாளிகளுக்கு ஒய்வூதிய ஆணைகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கி திட்டத்தை தொங்கி வைத்தாா். தொடா்ந்து, விழுப்புரம் ஆட்சியரகத்தில் மே 7-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் 700 பயனாளிகளுக்கு ரூ.91.62 லட்சம் மதிப்பி லான ஓய்வூதிய ஆணைகளையும், 8 - ஆம் தேதி திண்டிவனத்தில் நடைபெற்ற விழாவில் 250 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான ஓய்வூதிய ஆணைகளையும் முறையே அமைச்சா்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ். மஸ்தான் வழங்கினா். விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 950 போ் ஓய்வூதியம் பெறுகின்றனா் என மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.