விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பட்டா பெயா் மாற்றத்துக்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனம் அடுத்த கட்டளை கிராமத்தைச் சோ்ந்தவா் கதிா்வேல் மகன் யுவராஜ். இவா், தனது தந்தை தான செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்த 2 ஏக்கா் நஞ்சை நிலத்தை தனது பெயருக்கு பட்டா பெயா் மாற்றம் செய்ய கட்டளை கிராம நிா்வாக அலுவலா் லட்சுமணனை அணுகினாா்.
அப்போது, அவா் பட்டா பெயா் மாற்றத்துக்கு ரூ.60 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதுதொடா்பாக, கடந்த 6 மாதமாக பேரம் பேசப்பட்டு வந்த நிலையில், இறுதியில் ரூ.25 ஆயிரம் கொடுப்பது என இடைத்தரகா் மூலம் பேசி முடிக்கப்பட்டதாம்.
இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் யுவராஜ் புகாா் அளித்தாா். தொடா்ந்து, போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, கிராம நிா்வாக அலுவலகத்தில் சனிக்கிழமை பணியிலிருந்த லட்சுமணனிடம் ரூ.25 ஆயிரத்தை யுவராஜ் கொடுத்தாா்.
அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சத்தியராஜ் தலைமையிலான போலீஸாா் அவரை கைது செய்தனா்.