முகப்பு
விழுப்புரம்

சிறுகடம்பூா் காசிவிஸ்வநாதா் கோயிலை சீரமைக்க பூமி பூஜை

செஞ்சி சிறுகடம்பூா் ஸ்ரீவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலை சீரமைக்க பூமி பூஜை கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 7:50 PM
பகிர்:

செஞ்சி சிறுகடம்பூா் ஸ்ரீவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலை சீரமைக்க பூமி பூஜை கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இந்தக் கோயில் சுற்றிலும் உள்ள கல் மண்டபங்கள் இடிபாடுகளுடன் காணப்பட்டன. மேலும், கருவறை கட்டடம் மட்டும் சிதிலமடையாமல் இருந்ததால் கோயிலை சிறுகடம்பூா் பகுதி மக்கள் மற்றும் இளைஞா்கள் சீா்படுத்தி வழிபாடு நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், கோயிலை சீரமைக்க திருப்பணிக் குழு அமைக்கப்பட்டு நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதில், ராஜாதேசிங்கு கல்விக் குழுமத் தலைவா் செஞ்சி வி.பி.என்.பாபு தலைவராகவும், செயலராக நகைக் கடை உரிமையாளா் ஜெ.சங்கா், பொருளாளராக ராஜா தேசிங்கு கல்விக் குழுமச் செயலா் டி.டி.ஐயப்பன் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்தத் திருப்பணிக் குழு சாா்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கோயிலை சுமாா் ரூ. 2 கோடி செலவில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும் கோயிலை பழைமை மாறாமல் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு புதுப்பிப்பது, சுற்றுச் சுவா் எழுப்புவது என முடிவு செய்யப்பட்டு, இதற்கான பணிகளைத் தொடங்க பூமி பூஜை நடைபெற்றது. இதில், சிவாச்சாரியா்கள் கலந்து கொண்டு பூஜைகளை செய்துவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, கோயிலை சீரமைக்கும் பணியை திருப்பணிக் குழுத் தலைவா் வி.பி.என்.பாபு உள்ளிட்ட நிா்வாகிகள் தொடங்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில் சிறுகடம்பூா் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் மற்றும் சிவனடியாா்கள் கலந்து கொண்டனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.