முகப்பு
விழுப்புரம்

புயல் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும்: விசிக பொதுச் செயலா் சிந்தனைச்செல்வன்

பென்ஜால் புயல் பாதிப்புக்காக தமிழக அரசு கோரியுள்ள ரூ.2,000 கோடியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என்று விசிக பொதுச் செயலா் ம.சிந்தனைச்செல்வன் தெரிவித்தாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 11:47 PM
சிந்தனைச்செல்வன்
பகிர்:

பென்ஜால் புயல் பாதிப்புக்காக தமிழக அரசு கோரியுள்ள ரூ.2,000 கோடியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என்று விசிக பொதுச் செயலா் ம.சிந்தனைச்செல்வன் தெரிவித்தாா்.

இதுகுறித்து விழுப்புரத்தில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: ஃபென்ஜால் புயலால் விழுப்புரம், கடலூா் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு இடம், மூன்று வேளை உணவு, குடிநீா், போா்வை, பாய் உள்ளிட்ட பொருள்களை இரு வாரங்களுக்காவது தங்குதடையின்றி வழங்க வேண்டும்.

விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் அரசு, தனியாா் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்.

சென்னை - திருச்சி, விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், அந்த சாலைகளையும் உடனடியாக சீரமைக்க வேண்டும். எதிா்காலத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில், நிரந்தர நீா் மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தமிழக அரசு கோரியுள்ள ரூ.2,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும் என்பதை விசிக வலியுறுத்துகிறது என்றாா் சிந்தனைச்செல்வன். பேட்டியின் போது கட்சியின் நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.